“மன தைரியம் ஜாஸ்தி போல பயமே வரலையா?”.. யானைகள் நடமாட்டம் மிகுந்த காட்டில் தனியாக 4 நாட்கள்.. கேரள டெக்கியின் திக் திக் அனுபவம்..!!!!
SeithiSolai Tamil April 06, 2026 08:48 PM

கேரளாவைச் சேர்ந்த 36 வயதான மென்பொறியாளர் சரண்யா, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலைப்பகுதிக்கு மலையேற்றத்திற்காகச் சென்றார்.

இறங்கி வரும்போது தனது குழுவினரிடமிருந்து பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் வழிதவறிவிட்டார். அவரிடம் அப்போது வெறும் 500 மி.லி தண்ணீர் மட்டுமே இருந்தது, கைப்பேசியும் பேட்டரி தீர்ந்து அணைந்துபோனது. இக்கட்டான இந்தச் சூழலிலும் மனம் தளராத சரண்யா, நான்கு பகல் மற்றும் நான்கு இரவுகளை அந்தக் காட்டுக்குள்ளேயே கழித்துள்ளார்.

யானைகள் நடமாட்டம் மற்றும் கனமழைக்கு மத்தியிலும், “எனக்கு ஏன் பயம் வரவில்லை என்று தெரியவில்லை” என அவர் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வனத்துறை, நக்சல் தடுப்புப் படை மற்றும் உள்ளூர் பழங்குடியினர் என 9 குழுக்கள் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை ஒரு ஓடையின் அருகே பாறையின் ஓரத்தில் தங்கியிருந்த சரண்யாவைக் கண்டுபிடித்து மீட்டனர்.

இரண்டாவது நாளில் ட்ரோன்கள் மூலம் தன்னைக் கண்டுபிடிக்க ஏதுவாக மலை உச்சிக்குச் சென்றதாகவும், பின்னர் மழை பெய்ததால் ஓடையின் அருகே தங்கியதாகவும் அவர் தெரிவித்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டபோதும் அவர் காட்டிய தைரியமும், புன்னகையும் மீட்புக் குழுவினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.