நட்டி நட்ராஜ், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோர் நடிப்பில் உருவான “TN2026” திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்திற்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தத் திரைப்படம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், தேர்தல் முடியும் வரை இதனைத் திரையிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக விமர்சிப்பது போல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் நையாண்டி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தலைவரை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என தவெக தரப்பில் குரல்கள் எழுந்துள்ளதால், ஏப்ரல் 10-ஆம் தேதி படம் வெளியாகுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி திரையுலகினரும் அரசியல் கட்சியினரும் காத்திருக்கின்றனர்.