ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், நிர்வாக மொழியில் கலந்துள்ள வெளிநாட்டுச் சொற்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகப் புதிய உள்ளூர்ச் சொற்களை அறிமுகப்படுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொலைக்காட்சி, கைபேசி மற்றும் ரயில் போன்ற பொதுவான வெளிநாட்டுச் சொற்களுக்கு மாற்றாகப் புதிய சொற்கள் கண்டறியப்பட உள்ளன.
இதற்காக நீதி அமைச்சகம் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பரிந்துரைக்கும் சொற்களைத் தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஆய்வு செய்து இறுதி முடிவை எடுப்பார். அதன் பிறகு அனைத்து அரசு ஆவணங்களிலும் இந்த புதிய சொற்களே பயன்படுத்தப்படும்.
தங்கள் நாட்டின் மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக நகரங்களில் உள்ள விளம்பரப் பலகைகளில் இருந்த ஆங்கிலச் சொற்களைத் தலிபான் அரசு அகற்றி வருகிறது.
2012-ம் ஆண்டிலேயே இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது தலிபான் ஆட்சியில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுச் சொற்களுக்குப் பதிலாக உள்ளூர்ச் சொற்களைப் பயன்படுத்துவது மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் என்று தலிபான் அரசாங்கம் நம்புகிறது. இம்மாற்றம் தலிபான்களின் புதிய மொழிக் கொள்கையின் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.