யார் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்? - இராணிப்பேட்டை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் கனிமொழியின் பேச்சு
சிவரஞ்சித் April 08, 2026 02:14 AM

இராணிப்பேட்டை  : பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றவர் எடப்பாடி பழனிசாமி; குற்றவாளிகளை தண்டிக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி: இராணிப்பேட்டை தொகுதி தேர்தல் பரப்புரையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.காந்தியை ஆதரித்து, இராணிப்பேட்டை இராஜேஸ்வரி திரையரங்கம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; உத்திரப்பிரதேசத்தில் ஒருவர் 100 ரூபாய் வரி கட்டினால் அவருக்கு 333 ரூபாய் கிடைக்கிறது. மத்திய பிரதேசத்திற்கு 279 ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 100 ரூபாய்க்கு வெறும் 29 ரூபாய் தான் ஒன்றிய அரசு தருகிறது.

இவ்வாறு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனையும் துரோகமும் செய்யக்கூடியவர்களுடன்தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து, கைகோர்த்து மேடையில் நிற்கிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், முத்தலாக் சட்டம், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அவற்றை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் போது, அண்ணாமலைக்கும் பழனிசாமிக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அப்போது அவர் என்ன கூறினார்? ‘இஸ்லாமிய சகோதரர்களிடம் சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்தது என் பெரிய தவறு. இனிமேல் அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்காது; உறவும் இருக்காது; கூட்டணியும் இல்லை’ என்று கூறினார்.

இன்று மீண்டும் பாஜகவோடு கைகோர்த்து மேடையில் நிற்கிறார். இதுவே எடப்பாடி பழனிசாமி அவர்களின் உண்மையான சுயரூபம். இன்று ஒன்றைச் சொல்வார்; அடுத்த நாள் அதை மாற்றிப் பேசுவார்; அதற்குப் பிறகு அதையும் மாற்றி வேறு ஒன்றைப் பேசுபவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டுக்கும், சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக நமக்கு எதிராக நிற்கிறார்கள். அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார், ‘இது தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.வுக்கும் இடையிலான தேர்தல்; தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் 1 கோடி 31 லட்சம் சகோதரிகள் மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் நமது ஆட்சி வந்தவுடன், அந்தத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ திட்டங்களின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன், அந்தத் தொகை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஆட்சிக்கு வந்த பிறகு, 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை, ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் சுமார் 58%–59% ஆக உள்ளன. தேசிய சராசரி 65% ஆகும். தமிழ்நாட்டில் அது 23% மட்டுமே உள்ளது. அதையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். 

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றபோது, குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு குற்றம் நடந்தால், குற்றவாளிகளை தண்டிக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.

இந்த ராணிப்பேட்டை தொகுதியிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள். கலைஞர் உரிமைத் தொகை அது மட்டும் இங்கே 52,000 பெண்களுக்கு இங்கே வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டையிலே 11 கோடி மதிப்பீட்டில் வாரசந்தை வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்பறை கட்டடங்கள் இப்பொழுது கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க செய்த வளர்ச்சிப் பணிகள்:

இந்தத் தொகுதியில் மட்டும் 52,813 மகளிர்க்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இராணிப்பேட்டை மாவட்ட அளவில் மகளிர் விடியல் பயணத் திட்டம் மூலம் 7.88 கோடி முறை மகளிர் கட்டணமில்லாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தொகுதியில், காலை உணவுத் திட்டத்தின் மூலம் 5,477 பள்ளி குழந்தைகள் நாள்தோறும் பயனடைகின்றனர். மாவட்ட அளவில் நான் முதல்வன் திட்டம் மூலம் 76,552-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பெற்றுள்ளனர். இராணிப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது.

இராணிப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 11.5 கோடி மதிப்பீட்டில் இராணிப்பேட்டை வாரசந்தை வணிக வளாகம். அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 30 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்: 

பாலாற்றின் குறுக்கே அரப்பாக்கம், திருப்பாற்கடல் பகுதிகளில் புதிய உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படும். நெல் விளையும் பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

நெல் அதிகம் விளையும் பகுதிகளில் Silo Storage முறையில் தானிய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும். சிப்காட் பகுதியில் தொழிலாளர்களின் நலன் காக்கத் தொழிலாளர் நல அரசு மருத்துவமனை அமைக்கப்படும். தொழிற்சாலைகள் அதிகமுள்ள இராணிப்பேட்டையில் பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கும் பொருட்டு தொழிற்சாலைகளுடன் இணைந்து குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும்.

இராணிப்பேட்டை சார்ந்த நிஷாந்த் என்ற இளைஞர், இந்திய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 821வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதாரண பின்னணியில் இருந்து, கல்வியே ஒரு கனவாக இருந்த நிஷாந்த், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து அந்தத் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து, தற்போது அதிகாரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதான் நான் முதல்வன் திட்டம் இதுதான் நம்முடைய ஆட்சியின் வெற்றி. 

இடஒதுக்கீடு என்பது, கால் உடைந்த ஆட்டைக் தோளில் சுமந்து வருவது போன்றது என்று கலைஞர் அவர்கள் கூறுவார். அந்த தோளில் சுமந்து வந்த ஆட்டையே ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் ஓட வைத்தவர் நமது முதலமைச்சர். இத்தகைய பெருமையோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன் மறுபடியும் திராவிடம் மாடல் ஆட்சி வரவேண்டும் . நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கவேண்டும் என்று பேசினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.