'எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது?, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்தான்'; மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!
Seithipunal Tamil April 08, 2026 04:48 AM

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு பேசிய அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

முந்திரி, பலா, மின் உற்பத்தி உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குகிறது கடலூர். எத்தனையோ பெருமைகள் கொண்ட மாவட்டம் கடலூர். 05 முறை ஆட்சி செய்து நவீன தமிழ்நாட்டை கலைஞர் உருவாக்கினார். சாதனை திட்டங்களை நிறைவேற்றிய தெம்போட, திராணியோட உங்களை சந்திக்க வந்துள்ளேன் என்று குறிப்பிட்டு, துரோகிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க உறுதியுடன் நமது கொள்கை கூட்டணியில் பிரேமலதா இணைந்துள்ளார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா நம் கூட்டணியில் பிரேமலதா இணைந்துள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி நாசம் செய்த நிதி நிர்வாகத்தை நாம் சரி செய்தோம் என்றும், 0.07 விழுக்காடு என்ற வளர்ச்சியில் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியிருந்தார் எடப்பாடி என்று விரசித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்த நாசங்களை, திராவிட மாடல் ஆட்சியில் சரி செய்தாக குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என்றும், திமுக ஆட்சியில் 11.19% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறதாகவும், திராவிட மாடல் ஆட்சியில் நாம் செயல்படுத்திய ஒவ்வொரு திட்டமும் சூப்பர் ஹிட் என்றும் தெரிவித்துள்ளதோடு, மகளிர் மேம்பாட்டுக்கு முதல் நாளிலேயே விடியல் பயணத் திட்டத்தில் கையெழுத்திட்டு தான் சாத்தியப்படுத்தியதாக பெருமையாக பேசியுள்ளார்.

மேலும், திமுக திட்டங்களை பின்பற்றி பல மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் கொண்டு வருகிறார்கள். நம்முடைய திட்டங்களை காப்பி அடித்தே பழக்கப்பட்ட அதிமுகவும் அறிவித்துள்ளது என்று விமர்சித்து பேசியுள்ளார்.

அதேப்போன்று, மகளிர் விடியல் பயணத் திட்டத்தை நியாயமாக வரவேற்க வேண்டிய பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார் என்றும், சொன்னால் சொன்னதை செய்கிற ஆட்சிதான் திமுக என்று சுட்டிக்காட்டியதோடு, மகளிர் முன்னேற்றம் பற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை என்றும், தமிழ்நாட்டை சீரழிக்க என்.டி.ஏ. கூட்டம் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்கள். தமிழை அழிப்பதற்கான என்.டி.ஏ.வின் திட்டம்தான் மும்மொழிக் கொள்கை என்று கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன், நாட்டை நாசம் செய்யத்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்றும், நம் உழைப்பையும் வரிப்பணத்தையும் சுரண்டும் திட்டம்தான் ஜி.எஸ்.டி. பச்சைப் பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது?, கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்தான் என்று இபிஎஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமலா குட்கா மாமூல் வசூல் நடந்தது என்றும் அமைச்சர்கள், 02 டிஜிபிக்கள் உள்பட பலரின் குட்கா ஊழல் நடைபெற்றது எடப்பாடி ஆட்சியில்தான் என்று சுட்டிக்காட்டி பேசியதோடு, தமிழ்நாடு வளர்ச்சியின் முன்னோக்கி போக வேண்டும் என்றால் திமுக அரசால்தான் முடியும் என்றும், பழனிசாமி தன்னுடைய சாதனைகளை பட்டியலிட்டு பேசியிருக்கிறாரா? என்று மு.க.ஸ்டாலின்  கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பழனிசாமியின் பேச்சுகளில் பொய்களும் அவதூறுகளும் மட்டுமே நிறைந்திருக்கிறது என்றும், தரம் தாழ்த்தி கொச்சைப்படுத்தி பேசுவது பழனிசாமி அன்ட் கோவுக்கு புதிது அல்ல என்று விமர்சித்துள்ளார். அண்ணா திமுக தற்போது அமித் ஷா திமுகவாக உள்ளது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் சங்கிக் கூட்டமாக அதிமுக மாறிவிட்டது என்று பேசியுள்ளார்.

அதாவது, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் பேச்சை நினைவுகூரவே நா கூசுகிறது என்றும், துரோகத்தின் முழு உருவமான பழனிசாமியின் வாக்குறுதிகளை நம்பாமல் கடந்த தேர்தலில் மக்கள் புறக்கணித்தார்கள் என்றும், சூப்பர் ஸ்டாரையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளேன் என்று பேசியுள்ளார்.

அத்துடன், ரூ.8,000 கூப்பன் எனும் இல்லத்தரசி திட்டத்தை சூப்பர் ஸ்டாராக தேர்தல் களத்தில் இறக்கியுள்ளதாகவும், 20 லட்சத்துக்கு அதிமகான விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும் எனவும், தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சூப்பர் ஸ்டாரான திமுக தேர்தல் அறிக்கையை களம் இறக்கி உள்ளோம் என்று கடலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.