'படைப்பாற்றல் என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தை ஒருபோதும் காயப்படுத்த முடியாது.' ஆபாச பாடல் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் முன் ஆஜராகாத நடிகைக்கு கண்டிப்பு..!
Seithipunal Tamil April 08, 2026 05:48 AM

'கேடி: தி டெவில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'சர்க்கே சுன்னர் தெரி' என்ற பாடலில் நடிகை நோரா ஃபதேகி மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் பாடல் வெளியான சில நாட்களிலேயே, அதில் இடம்பெற்ற வரிகள் மற்றும் நடன அசைவுகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் பெண்களை இழிவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில், அந்தப் பாடல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து, அது தொடர்பான விசாரணையை நேற்று தொடங்கியது.

அதனபடி, ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், பாடலாசிரியர் ரகிப் ஆலம், இயக்குனர் பிரேம் மற்றும் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் கவுதம், சுப்ரீத் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இந்த விசாரணையின் போது விஜயா ரஹத்கர் கூறுகையில், 'பாடலின் வரிகள் பெண்களின் கண்ணியத்திற்கு எதிராக இருப்பதற்கு எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். பாடலின் அர்த்தம் தெரியாது என்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதத்தை ஏற்க முடியாது. படைப்பாற்றல் என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தை ஒருபோதும் காயப்படுத்த முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.' என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, அங்கு ஆஜரானவர்கள் இந்த பாடல் சமுதாயத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டதுடன், மகளிர் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதத்தையும் வழங்கியுள்ளனர். மேலும், அடுத்த 03 மாதம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றி அதுகுறித்த அறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளனர். 

இந்த வழக்கில் நடிகை நோரா ஃபதேகி தரப்பில் வக்கீல் ஆஜரானார். ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆணையம், அவர் நேரில் ஆஜராக கடைசி வாய்ப்பாக வரும் 27-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. அதேபோல், தொழில்முறை காரணமாக வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவித்த நடிகர் சஞ்சய் தத், நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.