பாப் அல்-மண்டேப் நீர்வழியை முடக்கும் ஈரான்..? உலகளாவிய வர்த்தகத்துக்கு பெரும் ஆபத்து..!
Seithipunal Tamil April 08, 2026 07:48 AM

''இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்பட முடியாது" என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் கொஞ்சமும் பின்வாங்காமல் துணிந்து பதிலடி கொடுத்து வருகிறது. அத்துடன், அமெரிக்காவை எதிர்க்கும் வகையில் அதற்கான ஆயத்தங்களுக்கும் ஈரான் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சொந்த நாட்டிற்காகப் போரிட 14 மில்லியன் மக்கள்வரை தாமாக முன்வந்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதேப்போன்று, துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்களின் முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்ட பசிஜ் படை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் தங்கள் படையில் சேர்க்கத் தொடங்கியுள்ளது. 

இதில் அதிர்ச்சி தரும் செய்தியாக அந்தச் சிறுவர்களின் கைகளிலும் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தங்கள் தேசத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ஈரானியர்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலிகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.

வரும் நாட்களில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி மோசமடைந்தால், ஈரானின் பிராந்திய கூட்டாளிகள் முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் நீர்வழியை முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் பெரும் இடையூறு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாப் அல்-மண்டேப் நீரிணை இது உலகின் எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு முக்கிய பாதையாக இருக்கிறது. இது, செங்கடலின் அரேபியப் பகுதியில் உள்ள ஏமனுக்கும், ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவிற்கும் இடையே அமைந்துள்ளது. 115 கிலோமீட்டர் நீளமும் 36 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த நீரிணை, 1869-இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே குறுகிய தொலைவிலான கடல் வழியை வழங்கி, உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய இணைப்பாக மாறியுள்ளது.

இந்தச் செங்கடல் பாதை உலகின் மொத்த கடல்சார் போக்குவரத்தில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கையாளுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்கள், சூயஸ் கால்வாயை அடைய இதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

ஹார்முஸ் நீரிணை வழியைப்போன்று இதையும் ஈரான் முடக்கினால், அது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் 12 சதவீதத்தைப் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

கடந்த காலங்களில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் இந்த பாப் அல்-மண்டேப் நீரிணைப் பாதை வழியாக சென்ற கப்பல்களைத் தாக்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருப்பதால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எண்ணெய் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்நிலையில், பாப் அல்-மண்டேப் நீர்வழிப் பாதையும் மூடப்பட்டால், உலகம் இதுவரை சந்தித்திராத துயரத்திற்குத் தள்ளப்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.