வந்தே பாரத் ரயிலில் உணவில் பூச்சி: ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு..!
Top Tamil News April 08, 2026 09:48 AM

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இதில் மும்பையைச் சேர்ந்த ஆதித்யா என்பவருக்கு பரிமாறப்பட்ட உணவில், பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் தனக்கு பரிமாறப்பட்ட உணவை, புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார்.

அவர் கூறுகையில், 'நான் பயணிக்கும் ரயில் பெட்டியில் இதேபோன்று குறைந்தது இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம். இந்த உணவை, ஆர்.கே.குழுமத்தின் ஒரு பகுதியான, 'பிராண்டவன் புட் ப்ராடக்ட்ஸ்' என்ற ஒப்பந்த நிறுவனம் தயாரித்துள்ளது. 'இந்த உணவு தயாரிக்கப்பட்ட இடத்தில் சோதனை நடத்துங்கள். பரிமாறப்பட்ட உணவு, இந்திய உணவு தர பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி தயாரிக்கப்படவில்லை என்பது உறுதியாக தெரியும். 'குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். இது, லஞ்சம் மூலம் தீர்க்கப்படாது என நம்புகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி., நிர்வாகம் சமூக ஊடகத்தில் கூறுகையில், 'பயணியருக்கு தரமற்ற உணவை பரிமாறிய ஒப்பந்த நிறுவனத்துக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 'அந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளோம். முழுமையான சுத்தம் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டிற்காக சமையலறை சீல் வைக்கப் பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.