ஆன்லைன் மூலம் வேலை தேடும் இளைஞர்களைக் கவரும் வகையில், பீகாரில் ஒரு கும்பல் மிகவும் ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் "All India Pregnant Job Service" என்ற பெயரில் விளம்பரங்களை இக்கும்பல் பரப்புகிறது. அதில், குழந்தையில்லாத பணக்கார வீட்டுப் பெண்களுக்குக் குழந்தை பெற்றுத் தந்தால், அவர்களுக்குப் பல லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஆசை காட்டப்படுகிறது. இதில் சேர விரும்புவோரிடம் முதலில் 'பதிவு கட்டணம்' (Registration Fee) என்ற பெயரில் சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது.

பின்னர், பெண்களின் புகைப்படங்களைக் காட்டி அவர்களைத் தேர்வு செய்யச் சொல்லி, 'பாதுகாப்பு வைப்புத் தொகை' 'மருத்துவப் பரிசோதனை கட்டணம்' மற்றும் 'ஜிஎஸ்டி' எனப் பல காரணங்களைக் கூறி மெல்ல மெல்ல லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபர்களிடம் சுமார் ரூ.7.20 லட்சம் வரை பல்வேறு தவணைகளாகப் பெற்றுள்ளனர். பணம் கொடுத்த பிறகு, சம்பந்தப்பட்ட பெண்களைச் சந்திக்க வைப்பதாகக் கூறி ஒரு போலி முகவரியைக் கொடுத்துவிட்டு, இந்தக் கும்பல் தங்களது அலைபேசியை அணைத்துவிட்டுத் தலைமறைவாகி விடுகிறது.
பீகார் மாநிலம் நவாடா சைபர் கிரைம் போலீசார் இந்த மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இது தொடர்பாகச் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய பெயர்களில் இந்த மோசடி தலைதூக்கியுள்ளது.

"இத்தகைய ஆபாசமான மற்றும் நம்பமுடியாத விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் தங்களது பணத்தை இழக்க வேண்டாம். இது முற்றிலும் ஒரு சைபர் மோசடி," எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மானத்திற்குப் பயந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் புகார் அளிக்க முன்வராததையே இக்கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.