அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
ஸ்ரீராம் ஆராவமுதன் April 08, 2026 01:14 PM

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே 6 வாரங்களாக நடைபெற்றுவந்த போரால் உலக அளவில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிய நிலையில், அதற்கு சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக, போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார் ட்ரம்ப். இதற்கு ஈரானும் சம்மதித்து, இரு தரப்பிலும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் மீது பாசத்தை பொழியும் விதமாக, அந்நாட்டை மறுசீரமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் எனக் கூறி ட்ரம்ப் ஒரு புதிய பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் அவர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்.

ட்ரம்ப் தனது புதிய பதிவில் என்ன கூறியுள்ளார்.?

இதுவரை ஈரான் உச்சகட்டமாக மிரட்டியே பதிவுகளை போட்டுவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் மீது கரிசனத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள்! அது நடக்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது. அவர்களுக்கு போதும் என்றாகிவிட்டது! அதேபோல், மற்ற அனைவருக்கும் அப்படித்தான்!. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை அதிகரிக்க அமெரிக்கா உதவும். நிறைய நேர்மறையான நடவடிக்கைகள் இருக்கும்! பெரும் பணம் ஈட்டப்படும். ஈரான் புனரமைப்புப் பணிகளை தொடங்கலாம். நாங்கள் அனைத்து விதமான பொருட்களையும் அவர்களுக்கு வழங்குவோம். எல்லாம் நல்லபடியாக நடப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் காத்திருப்போம். அது நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன். அமெரிக்காவில் நாம் அனுபவிப்பதைப் போலவே, இது மத்திய கிழக்கின் பொற்காலமாக இருக்கலாம்!!!“ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்

முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், செவ்வாய்க் கிழமை இரவு ஈரான் முழுவதுமாக அழிக்கப்படும். அதன் மின் கட்டமைப்புகள், உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தரைமட்டமாக்கப்படும என்று கடுமையாக எச்சரித்திருந்தார். அதற்கு அடுத்தார்போல் அவர் போட்ட பதிவில் உலகமே அதிர்ச்சியடைந்தது. அதாவது, அந்த இரண்டாவது பதிவில், இன்று இரவு ஒரு நாகரிகமே அழியப்போகிறது என்று அவர் ஈரான் குறித்து ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், அது நடப்பதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால், இருதரப்பிலும்  இறுதிகட்ட தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போர்நிறுத்தத்தை தனது பதிவின் மூலம் ட்ரம்ப் அறிவித்தார்.

ஹார்முஸை திறக்க சம்மதித்த ஈரான்

ட்ரம்ப்பின் அறிவிப்பை வரவேற்று ஈரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் சம்மதம் தெரிவித்தது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உடனடியாக சரிவை சந்தித்தது.

இருப்பினும், இந்த போர் நிறுத்தம் 2 வாரங்களுக்கு மட்டுமே என ட்ரம்ப் தனது அறிவிப்பில் கூறியிருந்தார். எனினும், அதற்குள் ஒரு நிலையான ஒப்பந்தத்தை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதேபோல், ஈரான் உச்ச தலைவரும், இது முழுமையான போர் நிறுத்தம் அல்ல என தங்கள் ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது.

இப்படிப்பட்ட சூழலில் தான், ட்ரம்ப் இந்த புதிய பதிவை போட்டுள்ளார். இதனால், இதற்குப்பிறகு போர் மீண்டும் தொடங்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், ட்ரம்ப் எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.