US Iran War: ஹார்மஸ் ஜலசந்தி(Hormuz Strait) வழியாக வரும் அனைத்து வணிக கப்பல்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.18.50 கோடியாக நிர்ணயிக்கப்படுமாம்.
பல தசாப்தங்களாக ஹார்மஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் பயணமானது, எந்தவித தடையுமின்றி நடந்து வந்தது. ஆனால், அந்த நிலை இனி இருக்கப்போவது இல்லை. அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வந்த ஆறு வாரகால போரை, இரண்டு வாரத்திற்கு நிறுத்திக்கொள்ள இரண்டு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் ஹார்மஸ் நீர்வழிப்பாதையாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு, ஈரான் மற்றும் ஓமன் இணைந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கலாம் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது. 34 கிலோ மீட்டர் அகலம் உள்ள இந்த நீர்வழிப்பாதை மூலமே, உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெற்று வருகிறது. அதற்கு இதுநாள் வரை இல்லாத வகையில், புதியதாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது என்பது பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கக் கூடும்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்தது முதலே ஹார்மஸ் ஜலசந்தி மூடப்பட்டது. கட்டுப்பாடுகளை மீறி கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் சர்வதேச சந்தைக்கான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பலநாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் நிகழ்ந்தது. இந்நிலையில் தான், 40 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட்டு, அதற்கான ஒப்பந்தத்தில் சில நிபந்தனைகளுடன் நீர்வழிப்பாதை அனைத்து தரப்புக்கும் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ராணுவ நடவடிக்கையால், ஈரானின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுளது. இதனை குறிப்பிட்டு நாட்டின் பாதுகாப்பு, நிர்வாக மற்றும் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்புகளில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதால், மறுகட்டமைப்பு பணிகளுக்கான செலவுகளை கையாள, ஹார்மஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, போர் நிறுத்தத்திற்காக ஹார்மஸ் சுங்கக் கட்டணம் உட்பட ஈரான் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகள் தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியாகியுள்ள தகவலின்படி, கப்பலின் வகை, அதன் சரக்கு மற்றும் நிலவும் மற்ற சூழல்களைப் பொறுத்து போக்குவரத்து கட்டணம் மாறுபடும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக 2 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 18 கோடியே 52 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாம். இந்த கட்டணங்களை நிர்வகிக்கும் நெறிமுறைக்கான வரைவு பணிகளை ஓமான் உடன் இணைந்து தயார்படுத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கை போக்குவரத்தை தடுப்பதை காட்டிலும் எளிதாக்குவதை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், ஈரானின் வெளியுறவு இணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் இந்த சுங்கக் கட்டண முடிவை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. கட்டணம் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தற்போதைக்கு நடத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளன, ஐக்கிய நாடுகள் கடல் சட்டங்களின் கீழ், எல்லை நாடுகள் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிப்பதற்காக மட்டுமே கட்டணம் எதையும் கோர முடியாது. அதேநேரம் வழிகாட்டுதல், இழுத்தல் (டக்கிங்) அல்லது துறைமுக உதவி போன்ற குறிப்பிட்ட சேவைகளுக்கு மற்றும் வரையறுக்கப்பட்ட கட்டணங்களை விதிக்கலாம். அதேநேரம், இந்தக் கட்டணங்கள் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிலிருந்தும் வரும் கப்பல்களுக்கு எதிராகக் கடுமையாகப் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் சட்ட விதிகள் குறிப்பிடுகின்றன.
ஹார்மஸ் தொடர்பான நீண்டகால தீர்வுகள் மற்றும் நிலுவையில் உள்ள பல பிரச்னைகள் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே வரும் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன் முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஈரானின் முன்மொழிவிற்கே ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒருவேளை சுங்கக் கட்டணத்திற்கு பேச்சுவார்த்தையின் போதும் ஆதரவு தெரிவித்தால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு 40 முதல் 50 சதவிகிதம் அளவிற்கு ஹார்மஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையையே நம்பியுள்ளது. 90 சதவிகிதம் எல்பிஜி வாயுவும் இந்த வழியாகவே கொண்டுவரப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவிகிதம் இந்த வழியாக நடைபெறுகிறது. ஏற்கனவே விநியோக சங்கிலி பாதிப்பால் விலை உயர்வதை தடுக்க, கலால் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்நிலையில், சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்பட்டால் கூடுதல் செலவுகளை சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதை தவிர்க்க முடியாது என கூறப்படுகிறது. ட்ரம்ப் தொடங்கிய போரால் தான் அநாவசியமான இந்த கூடுதல் சுங்கக் கட்டணத்தை சுமக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் கடும் அதிருப்தியில் மூழ்கியுள்ளன.