குடும்பங்களை குறிவைக்கும் வின்ஃபாஸ்ட் VF MPV 7! - எப்படி இருக்கிறது?
Vikatan April 08, 2026 04:48 PM

தமிழ்நாடு அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட 17 மாதங்களில் தூத்துக்குடியில் தொழிற்சாலையை நிர்மாணித்து VF 6 மற்றும் VF 7 கார் உற்பத்தியை துவக்கிய வின்ஃபாஸ்ட் ஏழே மாதங்களில் இப்போது குடும்பங்களை குறிவைத்து VF MPV 7 என்ற மல்டி பர்பஸ் விஹிக்கிளை அறிமுகப்படுத்துகிறது.

மூன்று வரிசைகள் கொண்ட 7 சீட் மின்சாரக் காரான இதில் இருப்பது 60.13 kWh பேட்டரி. ஒரு முறை இதை சார்ஜ் செய்தால் 500 கி.மீட்டர் வரை பயணிக்கலாம் என்கிறது வின்ஃபாஸ்ட். ஆனால், அன்றாட பயன்பாட்டில் இது எத்தனை கி.மீட்டர் கொடுக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

சித்திரை திருநாளை ஒட்டி அறிமுகமாக இருக்கும் இந்த கார் தாராளமான காராக இருக்கிறது. நான்கே முக்கால் (4.71) மீட்டர் நீளம் கொண்ட இந்த காரின் அகலம் ஒன்றே முக்கால் மீட்டருக்கு (1.87) மீட்டர்.

உயரமும் ஒன்றே முக்கால் மீட்டர்தான் (1.73). போட்டிக் கார்களான கியா கேரன்ஸ், க்ளாவிஸ்.ev மற்றும் மஹிந்திராவின் XEV 9S ஆகியவற்றைவிட பெரிதாக இருக்கிறது. ஆம், இதன் வீல்பேஸ் 2.84 மீட்டர்கள். கிரவுண்ட் கிளியரன்ஸ் 183 எம்.எம்.

வெளிப்புறத் தோற்றம்: இதன் முகப்பில் வின்ஃபாஸ்ட்டின் லோகோ நடுநாயகமாக வீற்றிருக்க, அதன் இருபக்கங்களிலும் DRL... அதன் தொடர்ச்சியாக நீளும் லைட் பார்கள் ஆகியவை இவை வின்ஃபாஸ்ட் கார் என்பதை சொல்லுகின்றன.

இவற்றைத் தாண்டி காரின் முன்பக்கம் பளிச்சென்று தெரிவது இதன் LED முகப்பு விளக்குகள்தான். இதன் ஏர் டேம் மற்றும் பம்பர் ஆகியவை பெரிதாக காட்சியளிக்கின்றன.

காரை பக்கவாட்டில் இருந்து பார்த்தால் இது சரியான விகிதாசாரத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது விளங்கும். விண்டோ லைனில் இருக்கும் கிரோம் பட்டை காருக்கு தனி அழகை சேர்க்கிறது.

19 இன்ச் டயர்கள் பிரமாண்டமாக இருந்தாலும் அதற்கு மேல் வீல் ஆர்ச்சில் இருக்கும் பிளாஸ்டிக் கிளாடிங் மெல்லியதாகவே இருக்கிறது. கதவுப் பிடி, ORVM ஆகிய இரண்டும் பாடி கலரிலேயே இருக்கிறது.

Vinfast vf mpv 7

உள்ளலங்காரம்: முன் வரிசை சீட்டுகள் மட்டுமல்ல இரண்டாம் வரிசை சீட்டுகளும் தாராளமாக இருக்கின்றன. இரண்டாம் வரிசை சீட்டுகளை முன்பக்கமோ பின்பக்கமோ வசதிக்கு ஏற்ப நகர்த்திக்கொள்ள முடியும்.

அதேப்போல சாய்த்துக்கொள்ளும் வசதியும், அதாவது ரிக்லைனிங் செய்துகொள்ளவும் முடிகிறது. மூன்றாவது வரிசை சீட்டுகள்தான் இதில் ஆச்சரியம். ஆம், இங்கே காலை கீழே வைக்க வசதியான இடம் இருக்கிறது.

இரண்டாவது வரிசை சீட்டுகளைப் போலவே மூன்றாவது வரிசை சீட்டுகளுக்கும் ஏஸி வெண்ட் கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது வரிசை சீட்டுகளுக்குப் போவதும் ஒரளவு எளிதாகவே இருக்கிறது.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பார்த்தால் சாலை தெளிவாக தெரிகிறது. ஸ்டீயரிங்கை டில்ட் செய்ய மட்டுமல்ல தங்களை நோக்கி இழுத்துக்கொள்ள டெலஸ்கோபிக் வசதியும் இருக்கிறது. கியர் லிவரை ஸ்டீயரிங்கை ஒட்டியே கொடுத்திருக்கிறார்கள்.

10.1 இன்ச் கொண்ட தொடுதிரைதான் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டராகவும் செயல்படுகிறது. பக்கவாட்டு கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்வது துவங்கி காரின் ஏஸி வரை அனைத்து கண்ட்ரோல்களும் இதில்தான் இருக்கிறது.

அதனால் ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ் இருப்பது பெரிய ஆறுதலாக இருக்கிறது. ஃப்ளோட்டிங் சென்ட்ரல் கண்சோலில் வாட்டர் கப் ஹோல்டர் துவங்கி நிறைய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது.

இந்த சென்ட்ரல் கண்சோலின் கீழேதான் போனை சார்ஜ் செய்வதற்கான A டைப் மற்றும் C டைப் சார்ஜிங் போர்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

பர்ஃபாமன்ஸ்: இதில் இருப்பது 60.13 kWh பேட்டரி. இது 204 hp அளவுக்கு சக்தியையும் 280 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ECO, Normal, Sport என்று மூன்று டிரைவிங் மோட்ஸ் இருக்கிறது.

அதேப்போலவே Low, Medium, High என்று மூன்று ரீஜெனரேட்டிவ் மோட்ஸும் உண்டு. பர்ஃபாமன்ஸ்தான் முக்கியம் என்றால் இதை முழுமையாக ஆஃப் செய்துகொள்ளலாம்.

ECO மோடில் வைத்து ஓட்டினால் 500 கி.மீட்டர் ரேஞ்ச் கிடைக்கும் என்கிறது வின்ஃபாஸ்ட். அன்றாட பயன்பாட்டில் 425 கி.மீட்டர்கள் கொடுத்தால்கூட ஓகேதான். ECO மோடில் வைத்து ஓட்டினாலே போதுமான சக்தி வெளிப்படுகிறது.

நமக்கு 147 கி.மீட்டர் வேகம் வரை போக முடிந்தது. அதற்கு மேலும் போகவும் அதில் சக்தி இருந்தது. ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டினால் இந்த சக்தி மேலும் அதிகமாக வெளிப்படுகிறது. இதை ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் சார்ஜ் செய்தால் 10 - 80% சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது.

ஹாண்ட்லிங்: என்னதான் வேகமாக சென்றாலும் இது நிலைத்தன்மையோடு செல்கிறது. ஸ்டீயரிங் துல்லியமாக செயல்படுகிறது.

மோட்டார் விகடன் : தாராளமான கார். மூன்றாவது வரிசை சீட்டுகளைகூட பயன்படுத்த முடிகிறது. இதில் சன்ரூஃப், வெண்டிலேட்டட் சீட்ஸ் என்று துவங்கி பல சிறப்பு அம்சங்கள் இல்லை. அதனால் இதன் விலையும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை போட்டிப்போடும் அளவுக்கு இருக்கும்பட்சத்தில் இது நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் காராக இருக்கும்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.