சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற தீவிர பிரச்சார கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அவர் உரையாற்றியபோது, “திமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது.
இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.மேலும், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கப்படும். திமுக ஆட்சியில் தரமான மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாததால், மழைக்காலங்களில் சென்னை மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

ஊழல் தான் இந்த ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ளது” என்றும் அவர் சாடினார்.அதோடு, “திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் மிகச்சிலவே நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை வழங்குவதாக கூறியதும் நடைமுறைக்கு வரவில்லை” என்றும் குற்றம்சாட்டினார்.
அவர் தொடர்ந்து, “தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியது. கஞ்சா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அரசு செயல்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று மாதங்களுக்குள் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டு மக்கள் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது” என்றும் விமர்சித்தார்.மேலும், “வீட்டு வரி உயர்வு, குப்பைக்கும் வரி விதித்தது போன்ற முடிவுகள் மக்களை பாதித்துள்ளன.
ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதற்காக நடைபெறும் வாரிசு அரசியல் இந்த நாட்டிற்கு தேவையா? திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலையும் பரிதாபகரமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று தெரிவித்தார்.