மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ``UPA ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், எங்களது NDA கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அடிப்படைத் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, பா.ஜ.க தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பு புரியும். சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில் சேவையில் தமிழகத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பதற்றமடைவதைப் பார்த்தால், தி.மு.க தோல்வி பயத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது.
மகாராஷ்டிர முதல்வர் மதுரைக்கு வந்தபோது, 'பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள். மெட்ரோ திட்டம் கொண்டுவர முயற்சிப்போம்" என்றார். ஒரு மாநில முதலமைச்சர் வரவேற்காமல், `பிளாக்மெயில் செய்கிறார்கள்' என முதல்வர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியால் அவதூறு பரப்புவது முறையல்ல. மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் போன்ற திட்டங்கள் தமிழர்களின் பயண நேரத்தைக் குறைத்துள்ளன.
பிரதமர், உள்துறை அமைச்சர், ஏன் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தாலே முதல்வர் பதற்றமடைகிறார்.
சொல்லப்போனால், தி.மு.க-வின் மூத்த அமைச்சர் துரைமுருகனே வந்தே பாரத் ரயிலின் வேகத்தைப் பாராட்டி, அதில் பயணிப்பதையே விரும்புவதாக கேள்விப்பட்டேன். இதுதான் மத்திய அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி.
தி.மு.க எப்போதும் வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே முயல்கிறது. மத ரீதியான கருத்துக்களை யாராவது சொன்னால் கொதித்தெழும் இவர்கள், தங்களின் பிரிவினைப் பேச்சுகளை மட்டும் நியாயப்படுத்துகிறார்கள்.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்பதாக சொல்லும் இந்த அரசுதான், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இன்று தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
இதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத்துள்ளார். மக்களின் பணம் எங்கே சுருட்டப்பட்டது, வாக்குறுதிகள் எப்படி மீறப்பட்டன என்பதை இன்று மாலை விசாலாட்சி தோட்டம் வரை நடைபெற உள்ள எனது சுறாவளிப் பிரச்சாரத்தில் ஆதாரங்களுடன் விளக்குவேன். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றியபோது, எண்ணிக்கையை அதிகரிக்க விடாமல் தி.மு.க ஏன் முட்டுக்கட்டை போடுகிறது?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
"நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!" - முதல்வர் ஸ்டாலின்