தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமை செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களைத் தேர்தல் ஆணையம் பணிமாற்றம் செய்திருப்பது அதிகார வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தின் செயல் கடும் கண்டனத்திற்குரிய செயல்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு வரம்பிருக்கிறது. தன்னிச்சையான (arbitrary) நியாயமற்ற (unfair) செயல் அதிகார வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்திற்கு மேல் மக்கள் இருக்கிறார்கள், அந்த மக்கள் கைகளில் வாக்கு என்ற சக்தி இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையத்திற்கு நினைவு படுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது." என்று கூறியுள்ளார்.