'ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி!' - திரில்லரை எப்படி வென்றது குஜராத்?
Vikatan April 09, 2026 11:48 AM

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு தோல்விகளுக்குப் பின் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணியும், இரண்டு தொடர் வெற்றிகளால் தெம்பாக இருந்த டெல்லி அணியும் களம் கண்டன. டெல்லி அணி எவ்வளவோ முயன்றும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

Gill

வழக்கம்போல டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில், இந்தப் போட்டியில் மீண்டும் அணியில் இணைந்தது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

தொடக்க வீரர்களாக சாய் சுதர்சனும் கில்லும் களம் இறங்கினர். ஆனால், மூன்றாவது ஓவரிலேயே முகேஷ் குமார் வீசிய பந்தை பாயிண்ட் திசையில் அடிக்க முயன்று, சாய் சுதர்சன் போல்ட் ஆகி வெளியேறினார். பவர் பிளேயில் விக்கெட்டுகளைச் சரித்துவிடலாம் என அக்ஷர் பட்டேல் மாஸ்டர் பிளான் போட, அதை அப்படியே தவிடுபொடியாக்கினார் ஜாஸ் பட்லர். டெல்லி பவுலர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் நான்கு புறங்களிலும் பறக்கவிட்டு அதிரடி காட்டினார் பட்லர்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அக்ஷர், குல்தீப் யாதவைக் கொண்டு வந்தார். அதுவரை ருத்ரதாண்டவம் ஆடிவந்த பட்லர், குல்தீப்பின் சுழலில் சிக்கி அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஓய்வில் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் இறக்கிய கேப்டன் கில்லுடன், வாஷிங்டன் சுந்தரும் கைகோர்த்தார்.

இருவரும் 'டாப் கியரில்' அதிரடியைத் தொடங்க, பந்துகள் அனைத்தும் மைதானத்தின் ஸ்டாண்டுகளில் பறந்தன. இவர்களின் அபாரமான 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் அணியின் ஸ்கோர் 183 ரன்களைக் கடந்தது. கில் 77 ரன்களில் அவுட் ஆனாலும், இறுதியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிலிப்ஸ் ஜோடி அதிரடியைத் தொடர, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசங்கா ஜோடி, பவர் பிளேயை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, ஆறாவது ஓவரை வீச வந்த அசோக் சர்மா ஓவரை இந்த ஜோடி பிரித்து மேய்ந்தது. அந்த ஒரே ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்த ராகுல் - நிசங்கா கூட்டணி, குஜராத் பந்துவீச்சாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், 9-வது ஓவரை வீச வந்த பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக ஆடிக்கொண்டிருந்த பதும் நிசங்காவை அவுட் ஆக்கி, குஜராத் அணிக்கு முக்கியமான பிரேக் கொடுத்தார்.

ஆனால், மறுபுறம் நங்கூரமாக நின்ற கே.எல். ராகுல் எதற்கும் அஞ்சுவதாக இல்லை. விக்கெட் விழுந்தாலும் தனது ஆட்டத்தின் வேகத்தை அவர் குறைக்கவில்லை. அதே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மைதானத்தையே அதிரவைத்தார்.

குஜராத் அணியின் நிலைமை கையை விட்டு சென்று கொண்டிருந்த போது, 'நான்தான் இருக்கேன்ல' என்பதைப் போல 10-வது ஓவரை ரஷீத் கான் வீச, நிதிஷ் ரானா மற்றும் சமீர் ரிஸ்வி இருவரின் விக்கெட்களைத் தட்டித் தூக்கினார். ஆனால், மறுபுறம் ஆணி அடித்தார் போல் நின்று பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்தார் கே.எல். ராகுல்.

ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டிய நிலையில், டெல்லி அணி வெற்றிபெற 21 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல்.

முகமது சிராஜ் வீசிய ஓவரில் கே.எல். ராகுல் அடித்த ஒரு பந்து நேராக சாய் சுதர்சன் கையில் சிக்க, ரன் ஓட முயன்ற எதிர்முனை பேட்டர் ஸ்டப்ஸ், சாய் சுதர்சனின் மின்னல் வேகத் த்ரோவால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரில் டெல்லி ரசிகர்களுக்குப் பேரிடியாக, 92 ரன்கள் குவித்து சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த கே.எல். ராகுலும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விழுந்த இந்த இரண்டு விக்கெட்டுகளால், டெல்லி அணியின் வசம் இருந்த ஆட்டம் அப்படியே குஜராத் அணியின் கைக்கு மாறியது.

அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைத்து டெல்லி அணி ரசிகர்கள் தலையில் கை வைத்த போது, 'கடைசிலதான் வந்தாரு விநாய்க்' என்பதைப் போல மில்லரின் அதிரடி ஆட்டத்தால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றிபெற வெறும் 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில் பந்தை வீசினார் பிரசித் கிருஷ்ணா. முதல் பந்திலேயே விபிராஜ் ஒரு பவுண்டரி விளாச, குஜராத்திடம் பதட்டம் தொற்றிக்கொண்டது. 'டக் அவுட்டில்' இருந்த பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, தனது வழக்கமான பாணியில் பிரஷர் தாங்க முடியாமல் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே விபிராஜ் அவுட் ஆக, போட்டி மீண்டும் குஜராத் பக்கம் சாய்ந்தது.

ஆனாலும் மில்லர் விடுவதாக இல்லை,

ஒரு இமாலய சிக்ஸரைப் பறக்கவிட, போட்டி அப்படியே டெல்லியின் பக்கம் திரும்பியது. கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழலில் மைதானமே நிசப்தமானது. பிரசித் கிருஷ்ணா ஒரு புத்திசாலித்தனமான ஸ்லோயர் ஒன் வீச, அதை அடிக்க முடியாமல் மில்லர் தடுமாற, கையில் இருந்த வெற்றியைத் தாரைவார்த்த ஏமாற்றத்துடன் மில்லர் நிற்க, குஜராத் அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இந்த சீசனில் கடைசி பந்து வரை சென்று, ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமர்ந்து பார்க்க வைத்த பெருமை இந்தப் போட்டிக்கே சேரும்.!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.