வெயிலுக்கு இடையே மழை சர்ப்ரைஸ்...! கன்னியாகுமரி, மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
Seithipunal Tamil April 11, 2026 10:48 PM

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,"அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வானிலை நிலவரம் மாறுபட்ட தன்மையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா உள் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், விதர்பா, மரத்வாடா பகுதிகள் வழியாக உள் கர்நாடகம் மற்றும் உள் தமிழகம் வரை வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பாதை உருவாகி நிலவி வருகிறது.

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பொழிவுக்கான வாய்ப்பு உள்ளது.

மற்ற பகுதிகளான தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏப்ரல் 13 முதல் 17 வரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறட்சி தன்மை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை நிலவரத்தைப் பொருத்தவரை, ஏப்ரல் 11 மற்றும் 12 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், சற்றே உயர்வு காணப்படலாம். ஏப்ரல் 13 முதல் 15 வரை, சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை மெதுவாக அதிகரிக்கக்கூடும்.

இதே நேரத்தில், இயல்பை விட அதிகமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 11 முதல் 13 வரை கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் காரணமாக மக்கள் அசௌகரியத்தை உணரக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று மற்றும் நாளை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.