நெகிழ்ச்சி.. சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளி 14 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு... 300 அடி ஆழத்தில் உணவின்றிப் போராட்டம்!
Dinamaalai April 12, 2026 12:48 AM

மெக்சிகோ நாட்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவர், சுமார் 14 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த அந்தத் தொழிலாளியின் மன உறுதி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

மெக்சிகோவின் சினலோவா மாகாணத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கத்தில் கடந்த மாதம் திடீரென வெள்ளம் புகுந்தது. இதனால் சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், 300 அடி ஆழத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அனைவரும் கருதிய போதும், மீட்புப் படையினர் தங்கள் நம்பிக்கையைக் கைவிடாமல் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

சுமார் 14 நாட்கள் கழிந்த நிலையில், சுரங்கத்தின் இருண்ட பகுதிக்குள் மீட்புப் படையினர் தேடியபோது, தூரத்தில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் தெரிவதைக் கண்டு வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது, பிரான்சிஸ்கோ ஜபாடா (42) என்ற தொழிலாளி ஒரு சிறிய பாறை இடுக்கில் வெள்ளநீருக்கு நடுவே உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை வீரர்கள் கண்டறிந்தனர்.

சுமார் 300 அடி ஆழத்தில், போதிய உணவோ அல்லது வெளிச்சமோ இன்றி ஜபாடா 14 நாட்களைக் கழித்துள்ளார். அவரது சக தொழிலாளி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில், ஜபாடா மட்டும் பாறை இடுக்கில் பாதுகாப்பாக இருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

உடனடியாக ராணுவ வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டு, முதலுதவி அளித்தனர். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 14 நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்தைப் பார்த்த ஜபாடா, கண்ணீர் மல்க மீட்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

சுரங்க விபத்துக்களில் இத்தனை நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்படுவது மிக அரிதான ஒன்று எனப் புவியியல் நிபுணர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.