மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 02 நாள் அரசு முறை பயணமாக அபுதாபி சென்றுள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரண சூழல்களுக்கு மத்தியில், இந்திய அரசு வளைகுடா முழுவதும் தனது இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த பயணம் அமையும் என கூறப்படுகிறது. அதன்படி, மொரிஷியஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த வெளியுறவுத்துறை அமைச்சர், இன்றும், (ஏப்ரல் 11) நாளை (ஏப்ரல் 12) அபுதாபியில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இருதரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மறு ஆய்வு செய்யும் வகையிலும், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை பலப்படுத்தும் வகையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த தலைவர்களை ஜெய்சங்கர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே வளைகுடா நாடுகளில் போர் சூழல் நிலவி வந்த நிலையில், இந்தியாவின் எரிசக்தி கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், நிலையான விநியோகத்தைப் பாதுகாக்கவும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரே நேரத்தில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.