பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுகவின் பொன்முடிக்கு எதிராக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில், கடந்த ஆண்டு ஏப்ரல் 06-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கதக்க வகையில் பேசியிருந்தார்.
இதைக் கண்டித்து, அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி சைதாப்பேட்டை பனகல் மாளிகை சந்திப்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது, சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, வளர்மதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வளர்மதி தரப்பில் தெரிவிக்கையில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் ஆறு மாதம்தான் தண்டனை எனவும், பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.