ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது விதிமுறை மீறல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் மேலாளர் டக்-அவுட் பகுதியில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கௌஹாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த 11-வது ஓவரின் போது, அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர் டக்-அவுட்டில் அமர்ந்து தனது செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். நேரலை கேமராக்களில் இந்தத் திக் காட்சிகள் தெளிவாகப் பதிவாகின. மேலும், அவருக்கு அருகில் இருந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அந்த போன் திரையை எட்டிப் பார்த்தது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் ஊழல் தடுப்பு விதிகளின்படி (PMOA), ஆட்டம் நடைபெறும் டக்-அவுட் பகுதி மற்றும் மைதானத்திற்குள் வீரர்கள், பயிற்சியாளர்கள் அல்லது நிர்வாகிகள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தைத் தடுப்பதற்காகப் பின்பற்றப்படும் மிக முக்கியமான விதியாகும். அணியின் மேலாளருக்குச் செல்போன் அனுமதிக்கப்பட்டாலும், அதை அவர் ஓய்வறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; டக்-அவுட்டிற்கு எடுத்து வர அனுமதி இல்லை.
இந்த விவகாரத்தைப் பிசிசிஐ மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “விதிமுறை மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அறியாமல் செய்த தவறாக இருந்தாலும், நெறிமுறைகளின்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியும், இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போது போட்டி நடுவர் நாராயணன் குட்டி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இது குறித்து விரிவான அறிக்கையைத் தயார் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்குப் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படலாம் அல்லது மேலாளர் ரோமி பிந்தர் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றிப் பாதையில் பயணிக்கும் ராஜஸ்தான் அணிக்கு, களத்திற்கு வெளியே எழுந்துள்ள இந்த விவகாரம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.