'ஜனநாயகன்' லீக் சர்ச்சை வெடிப்பு...! இதற்கு பின்னால் இருப்பது இவர்தான்...! - செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு
Seithipunal Tamil April 13, 2026 05:48 PM

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்க, பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசார வேகத்தில் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற முயற்சித்து வருகின்றன.

இந்த சூழலில், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டார்.

அவர் தெரிவிக்கையில், அனைத்து தரப்பு மக்களும் தவெக தலைவர் விஜயை ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பாஜக தரப்பிலிருந்து வரும் எந்தவொரு அழுத்தத்திற்கும் விஜய் தலைவணங்கக்கூடியவர் அல்ல.

"சிங்கம் தனியே பயணிக்கும்; அது கூட்டத்தை நாடாது. இறுதியில் வெற்றி சிங்கத்துக்கே" என்று உறுதியுடன் தெரிவித்தார். மேலும், விஜய் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்றும், தமிழ்நாட்டின் அரசியல் திசை அவரது கையில் உருவாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, அதிமுக வீழ்ச்சிக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், அவர் துரோகத்தின் உருவகமாக திகழ்கிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை மந்திரியுமான எல். முருகன் தான் “ஜனநாயகன்” திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனதற்குப் பொறுப்பாளர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.