நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்ற நிலையில், இந்தப் படம் மட்டும் எப்படி கசிந்தது என்பது குறித்துச் சந்தேகம் எழுப்பினார்.
மேலும் தயாரிப்பு நிறுவனத்தைத் தவிர வேறு யாரிடமும் முழுமையான நகல் இல்லாத சூழலில், இது ஒரு திட்டமிட்ட சதிச்செயலாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதே பியூஷ் கோயல் தனது சந்தேகக் கணைகளை வீசியுள்ளார்.
இதனால் படம் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தை விமர்சித்தவர்களே, தற்போது இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், ஒருவேளை தீவிர விசாரணை நடத்தப்பட்டால் அவர்கள் அம்பலப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, சைபர் கிரைம் துறையினர் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.