நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடித்து கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் TN2026. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. படத்தில் உள்ள காட்சிகள் தவெக தலைவர் விஜயை விமர்சிக்கும் விதமாக பலர் கூறி வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் TN2026 படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
TN2026 படத்தை பற்றி வீடியோ வெளியிட்டுள்ள சீமான் " அண்மையில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் TN2026. இந்த படத்தை என்னுடைய பேரன்பிற்குரிய கண்ணன் ரவி தயாரித்துள்ளார் . ஏற்கனவே இவரது தயாரிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை நம் எல்லாரும் பார்த்தோம். தற்போது TN2026 படம் வெளியாகியுள்ளது. நாட்டில் நடக்கிற அரசியல் சூழல்களை , அவலங்களை , குறைகளை துணிந்து சுட்டிக்காட்டுகிற எழுத்துகளோ , படங்களோ வருவது இப்போது சுத்தமாக குறைந்துவிட்டது. நாங்கள் அமைதிப்படை படத்தை எடுக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்கு தான் தெரியும். இன்று அப்படிபட்ட படங்கள் வருவதில்லை. இந்த சூழலில் இன்றைய அரசியல் சிக்கல்களை அவலங்களை மிக நேர்த்தியாக , எல்லோரும் ரசிக்கும்படி , யார் மனதும் புண்படாதபடி , யாரையும் வழிந்து திணித்து தாக்கவேண்டும் என்கிற நோக்கமில்லாமல் மிக நகைச்சுவையோடு இந்த அவலத்தை மக்களுக்கு சொல்லுகிற படம் TN2026. தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி ராமையா இந்த படத்தை மிக சிறப்பாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி இளையோருக்கு வாய்ப்பு கொடுத்து இந்த மாதிரியான படங்களை தயாரித்து வருகிறார். கதாநாயகனாக என்னுடைய அன்பு மாப்பிள்ளை நட்டி நடித்துள்ளார். நட்டி ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு ஒரு திறம்மிக்க நடிகராக உருவாகியுள்ளார். இந்த படம் குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இந்த படம் உருவாகியுள்ளது. TN2026 படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் " என்று கூறியுள்ளார்.