"உதயநிதி Diaper போட்ட காலத்தில் MLA-வாக இருந்தவர் அண்ணன் எடப்பாடியார்”- அண்ணாமலை
Top Tamil News April 14, 2026 01:48 AM

திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க முடியாது  என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.


    
சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.சதாசிவம் மற்றும் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.வினோத் ஆகியோரை ஆதரித்து  பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் பட்டைகோவில் பகுதியில்  இன்று பரப்புரை மேற்கொண்டார். திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த  மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மண்ணின் மைந்தர் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராக மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலம் மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியவர்களுக்கு அடைக்கலம் அளித்த சுற்றுலா துறை  அமைச்சர் ரா.ராஜேந்திரனுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். எங்கேயும் இல்லாத  வகையில், சேலம் மாநகராட்சியில் சொத்து வரி மட்டும் 275 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வளவு சொத்து வரி உயர்த்தியும் சேலம் மாநகராட்சியில் எந்த வித வளர்ச்சிப்பணிகளும் இல்லை. அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.


எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, சேலத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் மேயருக்கு தகுதியாக மாவட்ட செயலாளரின் பி.ஏ-க்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுரையில் குப்பையில் ஊழல் செய்ததற்காக மேயர் ராஜினாமா செய்து விட்டார். மேயர் என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவி  பொறுப்பாகும். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால், முட்டாள்கள், தற்குறிகளைத் தான் மேயராக தேர்ந்தெடுப்பார்கள். ஒழுக்கமான, நியாயமான நேர்மறையானவர்களைத் தான் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.மோசடியான நபர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தான் அமைச்சர் ராஜேந்திரன் சென்று தொடங்கி வைக்கிறார். மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்தவர்களுக்கு அமைச்சர் ரா. ராஜேந்திரன் உதவுகிறார். தனியார் அறக்கட்டளையில் ரூ.500 கோடிக்கு மேலாக மோசடி நடைபெற்றுள்ளது. அமைச்சர் ராஜேந்திரன் உடன் இருந்ததால் தான் மக்கள் முதலீடு செய்து ஏமாந்து விட்டனர். சிறுபான்மையின மக்கள் திமுகவின் வெறுப்பு பிரசாரத்துக்கு இரையாக கூடாது.  வெறுப்பை விதைத்து ஆட்சியை தக்க வைக்கலாம் என நினைக்கின்றனர். உதயநிதி வார்த்தை சரியாக இல்லை.உதயநிதி Diaper போட்ட காலத்தில் MLA-வாக இருந்தவர் அண்ணன் எடப்பாடியார் 

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.  ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பணியாற்றிய தமிழக காவல்துறையின் கைகளை திமுக அரசு கட்டி விட்டது. அவர்களின் மாண்பை குலைத்து விட்டது. திமுக அமைச்சர்கள், காவல்துறையை கொத்தடிமை போல நடத்துகின்றனர். சாலையில் நடந்து கூட செல்ல முடியாத  பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கை மனதில் வைத்து திமுக அரசை பொதுமக்கள் அகற்ற வேண்டும்.எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் கையெழுத்து மாற்றி போட்டும் நிராகரிக்கவில்லை. 20 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். தலைமை செயலாளர் தலையீட்டால் தான் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதற்கு பிறகும் தேர்தல் ஆணையம் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்.அரசியல் மாற்றத்தை, ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் ஏற்படுத்த வேண்டும். பாரம்பரிய நகரமான சேலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டம், திருமணிமுத்தாறு சீரமைப்பு திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது. இந்த திட்டங்கள் மீண்டும் கொண்டு வர விவசாயி முதலமைச்சராக வரவேண்டும். விவசாய பிரச்னைகளை திமுக அரசு தீர்க்கவில்லை. தோல்வி பயம் காரணமாக எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.  திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க முடியாது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் திமுக நிர்வாகிகளாக இருக்கின்றனர். சேலத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பரப்புரையில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.