Jana Nayagan: கேபிள் டிவியில் ஒளிபரப்பான ஜனநாயகன்.. கூண்டோடு தூக்கிய போலீசார்!
பேச்சி ஆவுடையப்பன் April 14, 2026 12:14 AM

நடிகர் விஜய் நடித்து இன்னும் ரிலீசாகாமல் உள்ள ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். 

திருட்டுத்தனமாக ரிலீசான ஜனநாயகன்

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜயின் சினிமா கேரியரின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காகும். ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், மோனிஷா பிளஸ்ஸி, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்திருந்தனர்.

இயக்குநர்கள் அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்றோர் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர். அனிருத் இசையமைத்த இப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியதால் சொன்ன தேதியில் ரிலீசாகாமல் முடங்கியது. இதனைத் தொடர்ந்து படக்குழு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தேர்தலில் விஜய் நிற்பதால் விதிப்படி இந்த படம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜனநாயகன் படம் திருட்டுத்தனமாக வெளியானது ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மணி நேர மொத்த படமும் ஹெச்.டி தரத்தில் வெளியானதால் எப்படி இது நடந்தது என தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர். பலரும் அதனை சமூக வலைத்தளத்திலும், செல்போனிலும் பகிர்ந்ததால் அவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கேபிள் டிவியில் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஜனநாயகன் படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி ராம் நகரைச் சேர்ந்த என்பவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார்.  இவர் தான் ஏப்ரல் 11ம் தேதி சட்டவிரோதமாக  ஜனநாயகன் முழு படமும் வெளியான மறுநாளே அதனை ஒளிபரப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கோயம்புத்தூர் கிழக்கு பிரிவு நிர்வாகி மோகனப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து இரண்டு சிறப்பு குழுக்கள் அமைத்து கேபிள் டிவி உரிமையாளர் பழனிசாமி  கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கணினி, ஐந்து ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கேபிள் டிவி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.