USA Iran War: ஈரானின் துறைமுகங்களை முடக்குவது அமெரிக்கா முன்னெடுக்கும் ஆபத்தான சூழல் என, சீனா எச்சரித்துள்ளது.
அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையை ஈரான் ஏற்காததால், ஹார்மஸ் நீர்வழிப்பாதை மற்றும் தெஹ்ரானின் துறைமுகங்களை முடக்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த துறைமுகங்களில் இருந்து வெளிவரும் ஈரானின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் எங்களது உரிமையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது போருக்கு வாருங்கள் என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் எப்ராஹிம் ரஜெய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், ”ஹார்மஸ் நீர்வழிப்பாதை மீதான எங்களது உரிமைஉள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லது எங்களுடன் மீண்டும் போரிட வேண்டும். அந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் தொடரும் என்பதையே உணர்த்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய துறைமுகங்களை முடக்கும் அமெரிக்காவின் செயல்பாடு ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீனா விமர்சித்துள்ளது. தெஹ்ரானின் துறைமுகத்தில் இருந்து வரும் அந்நாட்டின் எந்தவொரு கப்பலும் மூழ்கடிக்கப்படும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த சீனாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், “அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து, குறிப்பிட்ட பகுதிகளை முற்றுகையிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது பதற்றங்களை மேலும் அதிகப்படுத்தி, ஏற்கனவே பலவீனமாக உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைத்து, ஹார்மஸ் நீரிணை வழியாகச் செல்லும் பாதையின் பாதுகாப்பை மேலும் அச்சுறுத்தும்.” என கவலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடைஎயேயான இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவுற்றது. இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான 15 நாட்கள் இடைக்கால போர் நிறுத்த அவகாசம் முடிவடைதற்கு முன்பாகவே இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டு வருகிறதாம். தங்கள் தரப்பு கோரிக்கைகளை ஈரான் ஏற்க ஒப்புக்கொண்டால், மீண்டும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ட்ரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6 வாரங்களை கடந்து நீடிக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தரப்பும் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. அதேநேரம், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நபர்கள், அடுத்த சுற்றில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது. மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கான இடமாக இஸ்லாமாபாத் அல்லது ஜெனிவா பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். இருநாடுகளுக்கு இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் வரும் 21ம் தேதி முடிவடைய உள்ளது.