தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026” என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டார்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையின் பிரதிகளை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
பெண்கள் மின்சார ஸ்கூட்டர்கள் (EV Scooters) வாங்குவதற்கு ரூ. 25,000 மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 10,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஊக்குவிக்கும் வகையில், ரூ. 50 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த வாக்குறுதிகள் அமையப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழக அரசியலில் பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.