பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரிடையே நடைபெற்ற 21 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தை, எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பைக் கைவிடுதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு உள்ளிட்ட அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தப் பின்னடைவுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்துகொண்டிருந்த போதே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸைத் தொலைபேசியில் அழைத்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரு அழைப்பு, பேச்சுவார்த்தையின் கவனத்தை ஈரானின் இறையாண்மையிலிருந்து திசைதிருப்பி, இஸ்ரேலின் நலன்களை நோக்கித் திருப்பியதாக அவர் சாடியுள்ளார். “போர்க்களத்தில் அடைய முடியாத வெற்றியை, பேச்சுவார்த்தை மேஜையில் அடைய அமெரிக்கா முயல்கிறது” என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிலும் இறையாண்மையிலும் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாகவும் ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரானின் இந்தப் ‘போன் கால்’ புகார் குறித்து வாஷிங்டன் மற்றும் ஜெருசலேம் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.
அமெரிக்காவின் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளே சமரசத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக ஈரான் கூறி வரும் நிலையில், இஸ்ரேலின் தலையீடு குறித்த இந்தப் புதிய புகார் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.