USA Iran War: ”இனிமே உங்களால் எண்ணெயும் விக்க முடியாது” வெறி ஆகி ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த முடிவு
குலசேகரன் முனிரத்தினம் April 15, 2026 09:44 AM

USA Iran War: அமெரிக்கா - ஈரான் இடையேயான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னின்றி நடத்தும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

எண்ணெய் மீதான விலக்குகள் ரத்து..

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாததை தொடர்ந்து, ஈரான் கப்பல்கள் ஹார்மஸ் வழியாக செல்வதை தடுக்கும் பணிகளில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்ட, கச்சா எண்ணெய் விநியோக பற்றாக்குறையை சமாளிக்க, ஈரான் கச்சா எண்ணெய் மீதான விலக்குகளை ஒரு மாதத்திற்கு நீக்குவதாக முன்னதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார். அந்த விலக்கை இனி புதுப்பிக்கப்போவதில்லை என தற்போது அமெரிக்க தரப்பு அதிகாரமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையானது ட்ரம்பின் நிதித்துறை, ஈரான் மீது முழு வீச்சில் பொருளாதார அழுத்தங்களை செலுத்துவதை காட்டுகிறது. அதன்படி, 19ம் தேதிக்குப் பிறகு ஈரான் கச்சா எண்ணெய் மீதான பொருளாதார தடைகள் மீண்டும் அமலுக்கு வரவுள்ளன.  முன்னதாக அமெரிக்கா அளித்த அந்த விலக்கின் காரணமாக, 7 ஆண்டுகளில் முதல்முறையாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் அண்மையில் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

”ஒரே நாளில் தீரும் பிரச்னை அல்ல”

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையின்மையே இந்த போரை நிறுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.  மேலும், “இதனை ஒரே நாள் இரவில் தீர்க்க முடியாது. ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானமாக இருந்தனர். அந்த நாளில் எங்களிடையே ஏற்பட்ட முன்னேற்றம் நல்லபடியாக இருந்தது”எனவும் வான்ஸ் பேசி இருப்பது அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை காட்டுகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் மீண்டும் பேச்சுவார்த்தை

இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த சில தினங்களில் மீண்டும் பாகிஸ்தானில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்லாமாபாத் அல்லது இஸ்தான்புல் ஆகிய இரண்டு இடங்கள் பேச்சுவார்த்தைக்கான பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இடைக்கால போர் நிறுத்தத்திற்கான கால அவகாசம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், நிரந்த போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை இந்த வாரத்திலேயே முடிக்க இரு தரப்பும் தீவிரம் காட்டுகின்றன. ஈரானிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லாவிட்டாலும், பல பிரச்னைகள் தற்போது தீர்கக் கூடியதாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும், அணு ஆயுதச் செறிவூட்டல் வரம்புகள், ஹார்மஸ் ஜலசந்தியின் எதிர்காலம் மற்றும் ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கையாள்வது ஆகிய விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.