ரூ.25 கோடி காலி..! கேமரூன் கிரீன் ஒரு சுமை… கொல்கத்தா ஜெயிக்கணும்னா முதல்ல அவரை பெஞ்சில் உட்கார வைங்க… சேவாக் பரபரப்பு கருத்து…!!!
SeithiSolai Tamil April 15, 2026 11:48 PM

ஐபிஎல் 19-வது சீசனில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் நிர்வாகத்தைப் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் அணிக்குச் சுமையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஜிங்க்ய ரஹானே தலைமையில் இந்த சீசனில் களம் கண்டுள்ள கொல்கத்தா அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், ஒரு போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதன் மூலம், புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் இந்த மோசமான நிலைக்கு கேமரூன் கிரீனின் ஃபார்ம் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு (ரூ. 25.20 கோடி) வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரரான அவர், இந்த சீசனில் 5 போட்டிகளில் வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சிலும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

“உங்களிடம் அதிக பணம் இருந்ததால் கேமரூன் கிரீன் போன்ற ஒரு வீரருக்கு 25 – 27 கோடி ரூபாயை செலவு செய்துள்ளீர்கள். இப்போது அவர் அணிக்குச் சுமையாக மாறிவிட்டார். அவரை விளையாட வைத்தால் ரன்கள் எடுப்பதில்லை, ஒருவேளை நீக்கினால் இவ்வளவு பணம் கொடுத்து வாங்கிவிட்டு ஏன் அமர வைத்துள்ளீர்கள் என மக்கள் கேட்பார்கள். ஆனால், தவறை ஒப்புக்கொள்வதில் வெட்கப்பட வேண்டாம். கிரீன் மீது இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டது தவறு என்பதை நிர்வாகம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.”

அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றால் சில மாற்றங்கள் அவசியம் என சேவாக் கூறியுள்ளார். கேமரூன் கிரீனுக்குப் பதிலாக நியூசிலாந்தின் டிம் செய்ஃபர்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் எனவும், அவரும் ஃபின் ஆலனும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். கேப்டன் ரஹானே 3-வது இடத்தில் களம் இறங்குவது அணிக்கு வலுசேர்க்கும் என்பது சேவாக்கின் கருத்து.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது 6-வது போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. சேவாக்கின் ஆலோசனையை ஏற்று கொல்கத்தா நிர்வாகம் கேமரூன் கிரீனை நீக்கிவிட்டு புதிய வியூகத்துடன் களம் இறங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.