IPL 2026: காயத்துடன் சீறிபாய்ந்த கோலி.. கதிகலங்கி லக்னோ தோல்வி..!
TV9 Tamil News April 16, 2026 02:48 AM

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 23வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 15ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 147 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு (Royal Challengers Bengaluru) 15.1 ஓவர்களில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இந்த சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடந்த சில சீசன்களில் இந்த ஸ்டேடியத்தில் லக்னோ அணி பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றியின் மூலம், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி, ஐபிஎல் 2026 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை எட்டியது.

ALSO READ: முழு உடற்தகுதியுடன் தோனி.. அடுத்த போட்டியில் களம்.. சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்திய ஃபிளெமிங்!

150 ரன்களுக்குள் சுருண்ட லக்னோ:

ரஜத் பதிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் வெறும் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெறும் 12 ரன்களுக்கு எய்டன் மார்க்ரமை இழந்ததால், லக்னோ அணிக்கு ஒரு மோசமான தொடக்கம் அமைந்தது. பின்னர், ஐந்தாவது ஓவரில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தில் கேப்டன் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறினார். பின்னர் அவர் மீண்டும் அணிக்குத் திரும்பினாலும், ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதற்கிடையில், ஆயுஷ் படோனி (38) மற்றும் முகுல் சௌத்ரி (39) ஆகியோர் ஓரளவு ரன்களை சேர்க்க லக்னோ அணி 150 ரன்களை நெருங்கியது.

ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக ரசிக் தார் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ALSO READ: ரோஹித்துக்கு குணமடையாத காயம்.. மும்பை அணியின் தொடக்க வீரர் யார்..?.

அரைசதத்தை தவறவிட்ட கோலி:

​​ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி ஆக்ரோஷமாகத் தொடங்கி, 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டம், அணிக்கு ரன் சேஸிங்கை மிகவும் எளிதாக்கியது. அவர் தேவ்தத் படிக்கலுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பின்னர் கேப்டன் ரஜத் பாடிதார் 13 பந்துகளில் 27 ரன்களும், ஜிதேஷ் ஷர்மாவும் 9 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.