போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
ஸ்ரீராம் ஆராவமுதன் April 17, 2026 03:44 PM

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு, பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று. அங்கு பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தான் அரசு ஒரு காரணத்தையும் கூறியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

பாகிஸ்தானில் தினமும் இரண்டேகால் மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பு

மத்திய கிழக்கு போர் காரணமாக, உலகின் முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முதலில் முடக்கியது. அதைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில், குறிப்பாக கச்சா எண்ணெய்க்காக வளைகுடாவை நம்பியுள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனிடையே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டன. இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசு நாடுதழுவிய மின்வெட்டை அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான நேரத்தில், இரண்டேகால் மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அரசு கூறுவது என்ன.?

இந்த மின்வெட்டுக்கான காரணங்களையும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், அதன் காரணமாக மின்சாரக் கட்டண உயர்வை தவிர்ப்பதற்காகவும், எரிசக்தி தட்டுப்பாடு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றை சமாளிக்கும் விதமாக இந்த மின்வெட்டை அமல்படுத்துவதாக பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும், இந்த திட்டமிட்ட மின்வெட்டால், மின் கட்டணம் யூனிட்டிற்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும் என பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மின்வெட்டிலிருந்து சில நகரங்களுக்கு விலக்கு

இதனிடையே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டிலிருந்து, சில நகரங்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்நாட்டின் முக்கிய நகரங்களான கராச்சி மற்றும் ஐதராபாத் ஆகியவற்றுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளித்துள்ளது அந்நாட்டு அரசு.

எனினும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த மின்வெட்டால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.