ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள ராஜ்கர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில், 2 வயதுக் குழந்தை மட்டும் உயிர் தப்பியது. அதாவது ராஜ்கர் அருகே நிகழ்ந்த இந்த கோர விபத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் தீவிரத்தில் வாகனம் உருக்குலைந்த போதிலும், குடும்பத்தில் இருந்த 2 வயது சிறுமி ரித்தி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுமி ரித்தி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தனது பெற்றோர் உயிரிழந்தது கூடத் தெரியாமல், அந்தச் சிறுமி காவல் நிலையம் முழுவதும் “அம்மா… அம்மா…” என்று அழுதுகொண்டே தேடிய காட்சி அங்கிருந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும் நிலைகுலையச் செய்தது. சிறுமி தனது தாயைத் தேடி ஏங்கும் இந்த உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர் எவரையும் கலங்கச் செய்யும் வகையில் உள்ளது.
மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார், இது குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுமியைப் பராமரிக்கவும், அவரிடம் இருந்து பெற்றோர் இறந்த உண்மையை மறைக்கவும் போலீஸார் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.