"ஜெயலலிதா மேடத்தை அப்படி மரியாதை குறைவாகப் பேசியிருந்தால்..." - விஜய்யை விமர்சிக்கும் சத்யராஜ்
Vikatan April 19, 2026 06:48 PM

அரசியல் கட்சிகள் தங்களுடைய பரப்புரையை தற்போது பரபரப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நடிகர்கள் பலரும் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர். டி. சேகருக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அங்கு த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்யைக் கடுமையாக அவர் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

vijay

சத்யராஜ் பேசுகையில், 'தலைவா' படத்தின் ரிலீஸ் பிரச்னை வந்தபோது, விஜய் கொடநாடுக்குப் போய் ஜெயலலிதா மேடத்தைப் பார்த்து, 'அம்மா, அம்மா, ரொம்ப மன்னிச்சுக்கங்கம்மா. எப்படியாச்சும் எங்க 'தலைவா' படத்தை ரிலீஸ் பண்ணி விடுங்கம்மா' எனப் பேசினார்.

அது மாதிரி இப்போதும் மரியாதையாகப் பேசுவார் என்று நினைத்தேன்.

ஆனால், 'ஸ்டாலின் அங்கிள்' என்று சொல்லிவிட்டார். எனக்கு விஜய் 'ஸ்டாலின் அங்கிள்' என்று சொன்ன உடனே தம்பி இந்த மாதிரி இறங்கிப் பேச மாட்டாரே, படப்பிடிப்பு தளத்தில் எல்லாருக்கும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசுவாரே என்று தோன்றியது.

ஜெயலலிதா மேடத்திடம் 'மேடம் மேடம், நீங்க எப்படியாச்சும் தலைவா படத்தை ரிலீஸ் பண்ணுங்க மேடம்' என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் யோசித்துப் பாருங்கள், 'ஸ்டாலின் அங்கிள்' என்று சொன்னாரே, ஜெயலலிதா மேடத்தை அப்படி மரியாதை குறைவாகப் பேசியிருந்தால், என்ன ஆகியிருக்கும்?

சத்யராஜ்

ரோட்டு ஓரத்தில் முட்டை கலந்து கொத்து பரோட்டா போடுகிற மாதிரி போட்டிருப்பார்கள். அதற்கப்புறம் அவர் மேடையில், 'நான் ரெடி தான் வரவா வரவா' பாடலையெல்லாம் பாட முடியாது.

ஜெயலலிதா மேடத்தை அப்படிச் சொல்லியிருந்தால், 'தொட்டப்பட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா' பாட்டைத்தான் பாடியிருக்க முடியும்" என விமர்சித்திருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.