உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், திருமண விருந்தில் ரசகுல்லா அதிகம் சாப்பிட்ட 11 வயது சிறுவனை, ஆத்திரமடைந்த சமையல் ஊழியர் ஒருவர் எரியும் தந்தூரி அடுப்பில் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் சமன், தனது தாயின் மறைவுக்குப் பிறகு பஸ்தியில் உள்ள தாய்வழி பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறான். கடந்த புதன்கிழமை, மாலௌலி கோசாய் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் தனது பாட்டியுடன் சமன் சென்றிருந்தான்.
அங்கு உணவகப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரசகுல்லாக்களைச் சிறுவன் சமன் ஆசையுடன் மீண்டும் மீண்டும் எடுத்துச் சாப்பிட்டுள்ளான். இதைப் பார்த்த அங்கிருந்த கேட்டரிங் மேலாளர், சிறுவனைப் பலமுறை எச்சரித்துள்ளார். சிறுவன் அதைக் கேட்காமல் தொடர்ந்து இனிப்புகளைச் சாப்பிட்டதால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மேலாளர், பிஞ்சுச் சிறுவன் என்றும் பாராமல் அவனை அப்படியே தூக்கி, அருகில் கனன்று கொண்டிருந்த தந்தூரி அடுப்பிற்குள் வீசினார்.
அடுப்பில் விழுந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள், தீக்காயங்களுடன் அவனை மீட்டனர். சிறுவனின் முகம் மற்றும் உடல் கடுமையாகக் கருகியுள்ளது. உடனடியாக அயோத்தி மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், பின்னர் மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவனை அடுப்பில் வீசிய கேட்டரிங் மேலாளர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்துச் சிறுவனின் மாமா தேவித்தீன் நிஷாத் அளித்த புகாரின் பேரில், சாவ்னி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து டிஎஸ்பி ஸ்வர்ணிமா சிங் கூறுகையில், “தலைமறைவாக உள்ள கேட்டரிங் மேலாளரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,” எனத் தெரிவித்தார். ஒரு ரசகுல்லாவிற்காகச் சிறுவனைத் தீயில் வீசிய இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.