உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இருப்பது இந்தியா. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, இங்குதான் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிக்கின்றனர். இந்தியா என்ற கருத்தாக்கத்தின் உயிர்நாடியாக கருதப்படும் ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக தேர்தல் கருதப்படுகிறது.
ஆனால், இங்கு வாக்களிப்பது ஒன்றும் கட்டாயம் அல்ல. அவர்வர் விருப்பப்படி வாக்களிக்கலாம். இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.
தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது, தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு, அரசு நலத்திட்டங்களை பெறுவதில் இருந்து தடை விதிக்கும் வகையில் வழிகாட்டுதலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என கூறியுள்ளது.