தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம் இதோ..
TV9 Tamil News April 18, 2026 01:48 PM

Gold Price Today: தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, நாளை அக்ஷய திருதியை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு, இந்தத் திடீர் விலை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 உயர்ந்து ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 உயர்ந்து ஒரு சவரன் 1,14,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

அதன்படி, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 5 உயர்ந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ 2,80,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணங்கள்:

உலகளாவிய பொருளாதாரச் சூழல், சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன. மேலும், திருமண சீசன் மற்றும் அக்‌ஷய திருதியைக்கான தேவை அதிகரிப்பும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது, நீண்ட கால முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்தாலும், சாதாரண எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது எப்படி?.. இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

அட்சய திருதியை 2026:

இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், ஏப்ரல் 19, காலை 10.49 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. தொடர்ந்து, ஏப்ரல் 20, காலை 07.27 மணிக்கு திரிதியை திதி முடிவடைகிறது. தங்கம் வாங்க உகந்த நேரம் என்றால், ஏப்ரல் 19 காலை 10.49 மணி முதல் ஏப்ரல் 20 அதிகாலை 06:14 மணி வரை மிகவும் சிறப்பான நேரமாகக் கருதப்படுகிறது. மகாலட்சுமி குடியிருக்கும் பொருளாகத் தங்கம் கருதப்படுவதால், இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.