காதல் விவகாரம்.. ஆட்டோ ஓட்டுநரை குறி வைத்த தந்தை – மகன்.. ரத்த களறியான சம்பவம்!
TV9 Tamil News April 18, 2026 04:48 PM

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினி ஆண்டோ ( 22 வயது). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் ( 47 வயது). இவரும், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரனின் மகளை வினி ஆண்டோ விரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், ரவிச்சந்திரன் கவனத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதில், ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் வினி ஆண்டோவை கண்டித்துடன் தனது மகளை விரும்புவதை கைவிட வேண்டும் என்று எச்சரித்ததாக தெரிகிறது. ஆனால், இதனை வினி ஆண்டோ ஏற்க மறுத்துள்ளார். பின்னர், சில நாட்கள் கழித்து மீண்டும் வினி ஆண்டோவிடம், ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். இதனை, வினி ஆண்டோ ஏற்க மறுத்துள்ளார். இதனால், சம்பவத்தன்று இரவு வினி ஆண்டோவுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வினி ஆண்டோவை கத்தியால் குத்திய தந்தை- மகன்

இதில், ரவிச்சந்திரன் அவரது 17 வயது மகன் ஆகியோர் சேர்ந்து வினி ஆண்டோவை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில், மேலும் ஆத்திரமடைந்த இருவரும் வினி ஆண்டோவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ரவிச்சந்திரனும், அவரது மகனும் தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வினி ஆண்டோ ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

மேலும் படிக்க: “என் மரணத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது”.. ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

தீவிர சிகிச்சையில் பிரிந்த உயிர்

இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வினி ஆண்டோவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து வினி ஆண்டோ ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சில நிமிடங்களில் சிகிச்சை பலன் இன்றி வினி ஆண்டோ பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை – மகனை கைது செய்த போலீசார்

இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருவங்காடு போலீசார் வினி ஆண்டோ குடும்பத்தினரிடமிருந்து புகாரை பெற்று கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், ரவிச்சந்திரன் மற்றும் அவரது 17 வயது மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர். காதல் விவகாரத்தில் இளைஞரை தந்தை மற்றும் மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: துபாய் டூ திருச்சி விமான சேவை.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.