டெல்லி நகரில் திடீரென மாறிய வானிலை நிலை, விமானப் போக்குவரத்திலும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தால் அவதிப்பட்டிருந்த மக்களுக்கு நேற்றிரவு பெய்த கனமழை தற்காலிக நிம்மதியை அளித்தாலும், அதனைத் தொடர்ந்து உருவான வளிமண்டல மாற்றங்கள் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன.
இடி, மின்னலுடன் கூடிய மழை நகரம் முழுவதும் கொட்டித் தீர, மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்று நகரின் இயல்பு நிலையை பாதித்தது. இதன் விளைவாக பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியதுடன், வானிலை திடீர் மாற்றம் காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் மேலும் நிலைதடுமாறும் சூழல் உருவாகலாம் என டெல்லி மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும், நாளையும் வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விமான சேவைகளில் தாமதம் அல்லது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையை முன்னிட்டு, IndiGo விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
வானிலை காரணமாக விமான இயக்கங்களில் திடீர் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதால், பயணிகள் தங்களது விமான நிலையை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இணையதளங்கள் அல்லது செயலிகள் மூலம் நேரடி தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, பயணத் திட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமை சீராகும் வரை விமான சேவைகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.பயணிகளின் பாதுகாப்பும் வசதியும் எப்போதும் முதன்மை எனக் குறிப்பிடும் நிறுவனம், பயணிகள் பொறுமையுடனும் புரிதலுடனும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.