"தயவுசெய்து பொய் சொல்வதை நிறுத்துங்கள்!" – பவன் கல்யாணை நேருக்கு நேர் தாக்கிய பிரகாஷ் ராஜ்
ராஜேஷ். எஸ் April 18, 2026 08:44 PM

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தடுத்து வருவதாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் அவரை விமர்சித்தார்.

மசோதா தோல்வி தொடர்பாக பவன் கல்யாண் எக்ஸ் தளப்பக்கத்தில், “இந்திய சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு, எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே தடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் நோக்கம் அவர்களிடம் இல்லை என்பதை எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு தெளிவுபடுத்துகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க மறுப்பதன் மூலம், அவர்கள் மீண்டும் ஒருமுறை தேசிய முன்னேற்றத்தை விட அரசியல் கணக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகை மற்றும் பாலின நீதியை நோக்கிய நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒரு நடவடிக்கையைத் தாமதப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார்.

பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,“மோடியை மகிழ்விப்பதற்காக மட்டும் குடிமக்களிடம் பொய் சொல்வதை தயவுசெய்து நிறுத்துங்கள். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-லேயே அங்கீகரிக்கப்பட்டது. அதை இப்போதும் நிறைவேற்ற முடியும். ஆனால் உங்கள் கும்பல், ஆந்திரப் பிரதேசம் உட்பட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற விரும்பியது. உங்களை துணை முதல்வராக ஆக்கிய ஆந்திர மக்களின் சுயமரியாதையையும் மாநில உரிமைகளையும் விற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். விளக்குவதற்காக உங்களுடன் விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா? ” என்று கேட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.