#BREAKING : ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்..!!
Top Tamil News April 18, 2026 08:48 PM

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை துவக்கின. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

போர் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததுடன், உலகளாவில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டது.40 நாட்களாக தொடர்ந்த போரை கைவிடும்படி அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதன் பின், பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்சு நடந்தது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் பேச்சில் இடம் பெற்றன. 21 மணி நேரம் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

ஈரான் உடனான அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையாக உள்ள லெபனான் - இஸ்ரேல் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு நடத்தின. அதன் முடிவில், லெபனான் - இஸ்ரேல் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். லெபனான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அனைத்து வணிக கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி அறிவித்தார்.

இதற்கு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து இருந்தார்.அதேநேரத்தில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வந்தன. ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவு பெறும் வரையில் இது தொடரும் என அமெரிக்கா கூறியது.

இதனையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடிவிட்டது. அதனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள ஈரான் ராணுவம், அமெரிக்கா தனது நடவடிக்கையை கைவிடும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருக்கும் எனக் கூறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.