ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு...! - உயர் நீதிமன்றம் தீர்ப்பு பரபரப்பு
Seithipunal Tamil April 18, 2026 08:48 PM

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி குறித்து இரட்டை குடியுரிமை விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா தொண்டர் எஸ். விக்னேஷ் சிஷிர் தாக்கல் செய்த மனுவில், ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை முன்பு விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றம், குடியுரிமை தொடர்பான தீர்ப்பளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனக் குறிப்பிட்டு, கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவுக்கு எதிராக, மனுதாரர் அலகாபாத் உயர்நீதிமன்றம் முன் முறையீடு செய்தார்.

விசாரணை நடைபெறும் போது, ராகுல் காந்தி தனது குடியுரிமையை ‘பிரிட்டிஷ்’ என ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை மேலோட்டமாக ஆய்வு செய்தபோது, விசாரணைக்கு உட்பட்ட குற்றச்செயல்கள் இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த விசாரணையை தேவையான பட்சத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்க மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ள நிலையில், அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.