இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக விதமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கடந்த மார்ச் மாதம் மூடியது. உலகளவில் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த வழித்தடத்தில், எரிபொருளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதையடுத்து ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க விதிக்கப்பட்ட தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா விலக்கு அளித்தது. இதனைப் பயன்படுத்தி ரஷ்யாவின் ராஸ்நெப்ட், லுக்ஆயில் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வந்தன. இந்த விலக்கு கடந்த 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அளிக்கப்பட்ட தடை விலக்கை வரும் மே 16 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. போர் காரணமாக கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமம் ஈரான், கியூபா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய எந்த வர்த்தகத்திற்கும் அனுமதிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.