கடைசி ஓவர் வரை திரில்; பெங்களூருவை 06 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ்..!
Seithipunal Tamil April 19, 2026 03:48 AM

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டெல்லி அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 19 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த டிம் டேவிட் 26 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் லுங்கி என்கிடி தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

அடுத்து 176 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தொடக்கம் சற்று பின்னடைவாக அமைந்தது.

புவனேஷ்வர் குமாரின் அபார பந்துவீச்சில் பதும் நிசங்கா 01 ரன்னிலும், கருண் நாயர் 05 ரன்னிலும், மற்றும் சமீர் ரிஸ்வி 02 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும், கே.எல். ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை நிதானமாக ஆடி அணியை மீட்டெடுத்தனர்.

இதில், அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இரண்டு அணிகளுமே வெற்றிவாய்ப்பு சமனாக இருந்த நிலயில் பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி அதிரடி காட்டியது. ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

டேவிட் மில்லர் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.  இறுதியில் 19.5 ஓவர்களில் 04 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து பெங்களூருவை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் வெற்றிப் பெற்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.