ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் அல்லது இந்திய திசை நோக்கிச் சென்ற 02 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்துள்ளது. அத்துடன், அனைத்து வணிகக் கப்பல்களும் செல்லலாம் எனவும் அறிவித்தது. ஆனால், ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியைச் சுற்றியுள்ள சர்வதேசக் கடல்பகுதியில் அமெரிக்கா முற்றுகையிட்டிருக்கும் நிலையில், ஹார்முஸ் திறக்கப்பட்டதையடுத்து முற்றுகையை கைவிட வேண்டும் என அமெரிக்காவை ஈரான் எச்சரித்தது.
எனினும், ஈரானுடனான ஒப்பந்தம் கையெழுத்திடும் வரை முற்றுகை தொடரும் என ட்ரம்ப் அறிவித்ததையடுத்து எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி ஈரான் உத்தரவிட்டுள்ளது. இது, உலகநாடுகளிடையே மீண்டும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த 02 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் அல்லது இந்திய திசை நோக்கிச் சென்ற கப்பல்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை அந்தக் கப்பல்களுக்கு எந்தச் சேதமோ, மாலுமிகளுக்கோ உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில், இந்தியா தனது கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை விரைவில் மீண்டும் தொடங்குமாறு ஈரான் தரப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் கோரிக்கை குறித்து தெஹ்ரானில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று ஈரான் தூதர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து, கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அப்பகுதியில் இயங்கும் இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.