எடப்பாடியில் தவெக 'பிளான் பி'! டிவி சின்னத்துக்கு ஓட்டு போடுங்க! சுயேட்சைக்கு விஜய் ஆதரவு! அதிரடி முடிவை எடுத்த விஜய்!
Seithipunal Tamil April 19, 2026 06:48 PM

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் (தவெக) வேட்பாளர் தொடர்பான குழப்பம் புதிய அரசியல் திருப்பத்தை உருவாக்கியுள்ளது. வேட்புமனு நிராகரிப்பு மற்றும் வேட்பாளர் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த தொகுதிக்கான மாற்று அரசியல் திட்டத்தை விஜய் அறிவித்துள்ளார்.

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட அருண்குமார் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யாவின் மனுவும் ஏற்கப்படாததால், அந்த தொகுதியில் கட்சி நேரடியாக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், அருண்குமார் தொடர்பு துண்டிக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளிவந்து தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின.

இந்த சூழலில், தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முதலில் ‘நோட்டா’ ஆதரவு குறித்து யோசித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு, சுயேட்சை வேட்பாளருக்கு நேரடி ஆதரவு வழங்கும் முடிவை விஜய் எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எடப்பாடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் கூ. பிரேம்குமார் நம் முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி. அவரை நம் வேட்பாளராகக் கருதி, தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது சின்னத்தை முடக்கியவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், அவரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பால், எடப்பாடி தொகுதியில் தேர்தல் கணக்கு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. நேரடியாக போட்டியிட முடியாத நிலையில் கூட, தவெக தனது வாக்கு வலிமையை சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.