விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமாக வனஜா என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் இன்று தொழிலாளர்கள் பலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதியம் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 04 அறைகள் தரைமட்டமானது. இதன் போது ஆலையில் பணி செய்து கொண்டிருந்த சுமார் 23 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த சூழலில், பட்டாசு ஆலை தீ விபத்தில் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும்போது, ஆலை மீண்டும் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் போது மாவட்ட ஆட்சியரும் மாவட்ட எஸ்.பி உள்ளிட்டோர் உள்ளே இருந்துள்ளனர். இதில் தீயணைப்பு வீரர்கள், போலீஸ் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், அமைச்சர்கள் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே பட்டாசு ஆலையில் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை பெரிய விளக்குகள் பொருத்தப்பட்ட வெளிச்சத்தில், ஜேசிபி இயந்திரம் மூலம் இரவு 07:20 மணிவரை மீட்பு பணி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் உதவியில் ஈடுபட்டு வந்தனர்.
அத்துடன், இந்த பகுதியில் ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்பி ஸ்ரீ நாதா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மீட்பு பணியில் கட்டிட ஈடுபாடுகளை அகற்றியபோது, அதன் அடியில் சிக்கி இருந்த பட்டாசு வெடிகள் வெடித்து சிதறியதில் பெரிய தீ பிழம்பு ஏற்பட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தீக்குழம்புகள் வெளியேறிய போது கற்கள் வெடித்து நாலாபுறமும் சிதறின. இதனால் அங்கிருந்த ஆட்சியர், எஸ்பி மற்றும் போலீசார், செய்தியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய காட்சி நெஞ்சை பதறவைத்துள்ளது.
இதன் போதும் தீயணைப்பு வீரர்கள், காவலர்கள், பொதுமக்கள் என 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.