நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் தன்னை சாதி ரீதியாக அடையாளப்படுத்திக் கொண்டு பேசி இருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் தற்போது சாதி, மதம் அற்றவர் என சான்று கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;
கடந்த 1958 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த தனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின் சான்றுகளை பெறவில்லை எனவும் தனது ஜாதி, மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்றுகளோ தன்னிடம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என சான்று கோரி வேளச்சேரி தாசில்தாரருக்கு விண்ணப்பித்ததாகவும், அந்த விண்ணப்பம், சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு குறித்து நீதிபதி எம்.தண்டபாணி முன், நாளை விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.