திருச்செங்கோடு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் அருண்ராஜுக்கு ஆதரவான அலை வீசுவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் களத்தில் இறங்கி விசாரிக்கையிலும், 'அருண்ராஜ் வெற்றிக் கோட்டை எட்டிவிடுவார்' என்றே தொகுதியின் உள்விவகாரம் அறிந்தவர்கள் கணிக்கின்றனர்.
தொகுதியில் த.வெ.க-வின் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜுக்கு இருக்கும் ஆதரவுக்கு முழுமுதற்காரணம் அவருக்கு மக்கள் மீதும் கள அரசியல் மீதும் இருக்கும் ஈடுபாடே என்கின்றனர் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகிகள், ''எங்களின் தலைவர் சினிமாவை விட்டுவிட்டு வந்தார். அதேபோல்தான் அருண்ராஜும். முதலில் தனது டாக்டர் பணியைத் துறந்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக யு.பி.எஸ்.சி தேர்வெழுதி ஐ.ஆர்.எஸ் ஆனார். 10-15 ஆண்டுகள் மக்களுக்காக தனது வரையறைக்கு உட்பட்டு நேர்மையாகப் பணியாற்றினார். பண முதலைகள் பலரின் முகத்திரைகளைக் கிழிக்கக் காரணமாக இருந்தார்.
அருண்ராஜ்
வளைந்து கொடுக்காத துணிவும் அஞ்சாத நேர்மையும்தான் தலைவரையும் அருண்ராஜையும் ஒரே புள்ளியில் இணைத்தது. இருவருக்கும் எந்தத் தடையும் இல்லாமல் மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே ஒரே நோக்கம். அதனால்தான் தலைவர் தனது சினிமா கரியரை விட்டுவிட்டு வந்தார். அருண்ராஜ் தனது ஐ.ஆர்.எஸ் கரியரை விட்டு விட்டு வந்தார். தலைவர் த.வெ.க என்கிற கட்சியைத் தொடங்குவதற்கும், கொள்கைக் கோட்பாடுகளை வடிவமைப்பதற்கும் பெரும் ஊக்கமாக நின்றவர் அருண்ராஜ்தான். கட்சிக்குள்ளும் தலைவரின் மனசாட்சியாக நேர்மையின் சின்னமாகவே விளங்கினார்.
'அருண்ராஜ் பேசினால் அது அருண்ராஜின் குரல் இல்லை, தலைவரின் குரல்' என நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் தன்னை வைத்திருந்தார். கரூர் விவகாரத்தின்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை எங்கள் மீது வீசினர். அப்போது தலைவரின் சார்பாக கரூர் களத்தில் நின்று தனி ஆளாக அத்தனை கேள்விகளுக்கும் ஊடகத்தில் பதில் கொடுத்தவர் அருண்ராஜ்தான். தலைவர் சார்பாக ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து அவர்களின் வலியை தனது வலியாக ஏற்றுக்கொண்டு மக்களோடு மக்களாக நின்றார். அந்த ஈடுபாட்டைத்தான் அருண்ராஜ் திருச்செங்கோட்டிலும் காட்டினார்'' என்கின்றனர்.
'மார்ச் 10-ம் தேதி முதல்தான் தலைவர் வேட்பாளர்களை இறுதி செய்து தொகுதிக்கு அனுப்பினார். ஆனால், அதற்கு 3-4 மாதங்களுக்கு முன்பாகவே தலைவரின் உத்தரவோடு அருண்ராஜ் திருச்செங்கோடுக்கு வந்துவிட்டார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளைத்தான் முதலில் கையில் எடுத்தார். ஒவ்வொரு பூத்துக்கும் ஆக்டிவாக வேலை செய்யக்கூடிய 5 பேரை நியமித்து அவர்களுக்குத் தேர்தல் மற்றும் வாக்குச்சேகரிப்பு குறித்த தெளிவான புரிதலை ஊட்டினார். தேர்தலில் இவ்வளவு நுணுக்கமாக வேலை செய்ய வேண்டுமென்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது.
'மக்களிடம் செல், மக்களிடம் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்பது அண்ணாவின் கூற்று. இதை எங்களின் தலைவரும் பல மேடைகளில் கூறியிருக்கிறார். கட்சிக்குள் அந்த கூற்றுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டவர் அருண்ராஜ்தான். தினசரி மக்களை பார்க்க கிளம்பி விடுவார். ஒரு நாள் ஆட்டோ ஓட்டுநர்களோடு காக்கிச் சட்டையோடு நிற்பார். அவர்களின் அன்றாட சிக்கல்களை உடனிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வார். இன்னொரு நாள் விவசாயிகளோடு இருப்பார். மற்றொரு நாள் இளைஞர்களோடு இருப்பார்.
அருண்ராஜின் சொந்தத் தொகுதி என்பதால், மக்களுக்கும் அவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. மக்களோடு அவர் நெருங்கிச் செல்லும் பாங்கு அதை இன்னும் வலுப்படுத்தியது. மேலும், இதுவரை தொகுதியை கையில் வைத்திருந்த எம்.எல்.ஏ-க்கள் மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்த்தனர், அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலியையும் வாழ்வையும் யாரும் பார்க்கவில்லையே! தங்களின் உரிமைக் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லையே என்கிற ஏக்கம் தொகுதி மக்களுக்கு இருந்தது. அதையெல்லாம் தீர்த்து வைக்கும் வல்லமையோடு அருண்ராஜ் களத்தில் நிற்பதால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு இத்தனை வரவேற்பு'' என்கின்றனர் லோக்கல் த.வெ.க நிர்வாகிகள்.
அருண்ராஜ்
அருண்ராஜும் மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு தொகுதிக்கென ஸ்பெஷலாக ஜி5 என்ற பெயரில் திட்டங்களை அறிவித்திருக்கிறார். 'திருச்செங்கோட்டின் புராதன கோவில்களின் சிறப்பை உலகறிய செய்யும் வகையில் ஆன்மிக சுற்றுலா ஊக்குவிக்கப்படும். ரிக் தொழிலின் தலைநகரமாக தொகுதியை மாற்றும் வகையில் சிப்காட், டைடல் பார்க் போன்றவை நிறுவப்படும். மாணவ, மாணவிகளின் ஆற்றலை மேம்படுத்த திறன்வளர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். சாலை, குடிநீர், அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் வியத்தகு வகையில் மெருகேற்றப்படும். பருத்தி விவசாயத்தை செழிக்க வைக்கும் வகையில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்' அருண்ராஜ் அறிவித்திருக்கும் இந்தத் திட்டங்களுக்கான வரவேற்பைத் தொகுதியில் கண்கூடாக பார்க்க முடிகிறது'' என்கின்றனர்.
'வாயா... ராசா...' என 60 வயது பாட்டி தொடங்கி, 'ஹாய்... மாமா' எனச் சிறுவர்கள் ஹைபை கொடுக்கும் அளவுக்கு மக்களோடு மக்களாக கலந்து நிற்கிறார் அருண்ராஜ். 'மக்களோடு மக்களாக நிற்பவருக்கு வெற்றி மட்டுமே ஒரே முடிவாக கிடைக்கப் போகிறது. தலைவரோடு சட்டமன்றத்துக்கு சென்று எங்களின் உரிமைக்குரலாக ஒலிக்கப் போகிறார் அருண்ராஜ்'' என்கின்றனர் த.வெ.க-வினர்.